

உதகை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து இழுபறியாக உள்ளது. தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உதகையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் நடந்து வருகிறது. தோ்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் நீலகிரி மாவட்டத்தில் உதகை தொகுதியும் ஒன்றாகும். கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்த சூழலில் உதகை தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக சார்பில் உதகை உட்பட 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
உதகை தொகுதியில் போட்டியிடுவதற்குத் தகுதியான வேட்பாளரைப் பாஜகவால் இதுவரையில் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்துத் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி உதகையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை வந்தார். உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தகுதியான வேட்பாளர்கள் யார் யார் என ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய சி.டி.ரவி, 'தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு இணையாகச் செலவு செய்ய முடியுமா. குருமூர்த்தி போல விலை போய்விட்டால் என்ன செய்வது' எனக் கேட்டதும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறும் போது,'11 நபர்கள் கண்டறியப்பட்டு 3 தகுதியான நபர்களை இறுதி செய்துள்ளனர். இந்த பட்டியல் 5 பேர் அடங்கிய மத்தியக் குழுவிடம் வழங்கப்படும். அவர்கள் பரிசீலித்து வேட்பாளரை அளிப்பார்கள். நாளை மாலைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்' என்றனர்.
சி.டி.ரவியிடம் வேட்பாளர் அறிவிப்பு தாமதம் குறித்து கேட்டபோது, '3 தொகுதிகளுக்கு இன்றோ, நாளையோ வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். எவ்விதப் பிரச்சினையும் இல்லை. சிஏஏ குறித்து அதிமுகவிடம் சிறு குழப்பம் உள்ளது. அதுகுறித்து விளக்கம் அளிப்படும்' என்றார்.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி கடந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் அவா்களுக்கே ஒதுக்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் உதகை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் கடந்த தோ்தலில் அதிமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் இம்முறை இத்தொகுதியை கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.