காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் வரவேற்பைப் புறக்கணித்த சிட்டிங் எம்எல்ஏ ஆதரவாளர்கள்: சமூகவலைதளங்கள் மூலம் எதிர்ப்பு

காரைக்குடி தொகுதியில் கோவிலூரில் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி.
காரைக்குடி தொகுதியில் கோவிலூரில் ஊர்வலமாக சென்ற காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி வரவேற்பு நிகழ்ச்சியை சிட்டிங் எம்எல்ஏ ஆதாரவாளர்கள் புறக்கணித்தனர். மேலும் அவர்கள் சுவரொட்டியை அச்சடித்து அதை சமூகவலைதளங்களில் பரப்பி தங்களது எதிர்ப்பையும் காட்டியுள்ளனர்.

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ப.சிதம்பரம் ஆதரவாளரான மாங்குடியும், சிட்டிங் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆதரவாளரான தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமியும் சீட் கேட்டனர்.

இருத்தரப்பிலும் அழுத்தம் கொடுத்ததால் வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.

இதற்கிடையில் தேவகோட்டையில் நடந்த காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் வேலுச்சாமிக்கு சீட் கேட்டு அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

இந்நிலையில் திருவாடானைக்கு கே.ஆர்.ராமசாமி மகனுக்கு சீட் கொடுத்ததால் காரைக்குடிக்கு அவரது ஆதரவாளர் வேலுச்சாமிக்கு சீட் மறுக்கப்பட்டு, மாங்குடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் இருந்து அவர் காரைக்குடி வந்த மாங்குடிக்கு கோவிலூரில் காங்கிரஸார் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

தொடர்ந்து வேட்பாளர் காங்கிரஸார் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் காரைக்குடி நகர் முழுவதும் ஊர்வலமாகச் சென்றனர். மேலும் வேலுச்சாமிக்கு சீட் கொடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் அச்சடித்துள்ள சுவரொட்டி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in