

கோவை நவக்கரை அருகே ரயில் மோதிப் படுகாயத்துடன் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சின்னாம்பதி, புதுப்பதி கிராமங்கள் தமிழக- கேரள எல்லையோரம் அமைந்துள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள யானைகள் வாளையாறு ஆற்றில் நீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் இரண்டு ரயில்வே தண்டவாளங்களைக் கடந்து நீர் அருந்தச் செல்ல வேண்டும். இந்நிலையில் இன்று (மார்ச் 15) அதிகாலை 1.30 மணி அளவில் புதுப்பதி ரயில்வே கேட் அருகே ஆண் யானை ஒன்று ஆற்றில் நீர் அருந்த வந்துள்ளது.
அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற திருவனந்தபுரம்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், யானை மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், 100 மீ தூரம் யானை இழுத்துச் செல்லப்பட்டதில் அதன் தலை மற்றும் இடுப்புப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.
யானையால் தொடர்ந்து எழுந்திருக்க முடியாததால் அங்கேயே படுத்து விட்டது. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர், யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வனக் கால்நடை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “ரயில் தண்டவாளத்தின் வளைவான பகுதியில் ரயில் வரும்போது யானையும் தண்டவாளத்தை கடக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் யானையின் இடுப்புப் பகுதி பலமாக அடிபட்டுள்ளது. இதனால் எலும்பு முறிந்திருக்கலாம்.
முன்னங்கால்கள் நன்றாக அசைகின்றன. பின்னங்கால்களை யானையால் அசைக்க முடியவில்லை. வால் பகுதியிலும் உணர்ச்சி இல்லை. இடது தந்தம் உடைந்து நொறுங்கி விட்டது. யானை உயிருக்கு ஆபத்தான நிலையின்தான் உள்ளது"என்று தெரிவித்தனர்.