

சிவகங்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அமைச்சர் ஜி.பாஸ்கரன் வராததற்கு சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் விளக்கமளித்துள்ளார்.
சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன், அமமுக வேட்பாளர் அன்பரசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகா ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்தபிறகு அதிமுக வேட்பாளர் பி.ஆர்.செந்தில்நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுப, துக்க நிகழ்ச்சிகளில் கூட அதிமுக தேர்தல் அறிக்கையைப் பற்றிய பேச்சாக தான் உள்ளது. சிவகங்கை மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவுப்படுத்தப்படும்.
காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதை சிவகங்கை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த பாடுபடுவேன்.
மேலும் நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்கள் கூறும் பிரச்சினைகளை அறிந்து, தீர்ப்பேன். சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும், என்று கூறினார்.
மேலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய அமைச்சர் ஜி.பாஸ்கரன் வராதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ அமைச்சர் என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்ய வரவில்லை. அவரும், நானும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய உள்ளோம்,’ என்று செந்தில்நாதன் கூறினார்.