

கண்ணனைப்போல் குழுமணி மண்ணைத் தின்று வளர்ந்தவன் நான் என, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் கே.மகேந்திரனிடம், கு.ப.கிருஷ்ணன் இன்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் கு.ப.கிருஷ்ணன் கூறுகையில், "அதிமுக வேட்பாளராக மக்களின் மீதான நம்பிக்கையுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இந்தத் தேர்தலில் என்னை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், ஆதரிப்பார்கள் என்று உளமார நம்புகிறேன். இந்தத் தொகுதியில் பிறந்து வளர்ந்தவன். அவர்களுடன் இருந்தவன். கண்ணனைப்போல் குழுமணி மண்ணை உண்டு வளர்ந்தவன் நான். மண்ணின் மக்களின் அனைத்துத் துன்பங்களும் எனக்குத் தெரியும். அவர்களது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன்" என்றார்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் முதல்வர் கே.பழனிசாமியின் காலில் வேட்பாளர்கள் உள்ளிட்டோர் விழுந்து வணங்கியது தொடர்பான கேள்விக்கு, "நல்ல தலைவனிடத்தில் ஆசி பெற வேண்டும் என்பது இந்த மண்ணின் மரபு. இதில் வயதொன்றுமில்லை. வாழ்த்தவும், ஆசி அளிக்கவும் எவருக்குத் தகுதி இருக்கிறதோ அவர் காலில் விழுவது தவறேதுமில்லை" என்றார்.
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இருவர் சேர்த்து மொத்தம் 3 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், கு.ப.கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்குள் ஏராளமானோர் உள்ளே நுழைந்துவிட்டனர். தேர்தல் அலுவலர்களும், போலீஸாரும் வேட்பாளருடன் 3 பேரைத் தவிர்த்து எஞ்சிய அனைவரையும் அந்த அறையில் இருந்து வெளியேற்றினர். அதைத்தொடர்ந்து, கு.ப.கிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்தல் செய்தார். அப்போது, அதிமுக பகுதிச் செயலாளர்கள் ஜி.திருப்பதி (திருவானைக்காவல்), சி.சுந்தர்ராஜன் (ஸ்ரீரங்கம்) ஆகியோர் உடனிருந்தனர்.