

மக்களுக்கு வாஷிங் மெஷின் கொடுக்கப் பணம் எங்கிருந்து வரும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (மார்ச் 15) அத்தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் வர வாய்ப்பிருக்கிறதா?
சரியான, சமமான, தரமான கல்வி இலவசம். உலகத் தரத்தில் கல்வி அளிப்பேன். தென்கொரியாதான் கல்வித் தரத்தில் முதலிடத்தில் உள்ளது. அதை உறுதியாகத் தாண்டுவதற்கு திட்டம் வைத்திருக்கிறேன். உயிர் காக்கும் மருத்துவம் விற்பனைக்கு அல்ல. தனியாரும் மருத்துவமனை நடத்தட்டும். ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை என் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கொடுப்பேன். தூய குடிநீர் தருவேன். தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தருவேன்.
வாஷிங் மெஷின் தருவோம் என அதிமுக கூறியுள்ளதே?
6 லட்சம் கோடி கடன் இருக்கிறது. 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஒரு வாஷிங் மெஷின் ரூ.15 ஆயிரம் என வைத்துக்கொண்டால், பணம் எங்கிருந்து கொண்டு வருவீர்கள்? எங்கிருந்து பணம் வரும் என்பதற்கு திட்டத்தை வகுத்துச் சொல்லுங்கள். பொருளாதாரத்தைப் பெருக்கி அங்கிருந்து மக்களுக்குக் கொடுப்போம் எனச் சொல்லலாமே. தமிழக அரசில் எந்தத் துறையில் கடன் இல்லாமல் இருக்கிறது? நாட்டையும் நாட்டு மக்களையும் கடனாளியாக்கிவிட்டு, மறுபடியும் மறுபடியும் இலவசம் தருவோம் என வெற்று அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
திமுக, அதிமுக என இரு கட்சிகளையே மக்கள் தேடிச் செல்கிறார்களே?
என் அன்பு மக்களுக்குச் சொல்வது, தேடக்கூடாது. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என வழியே இல்லாமல் தேடக்கூடாது. நாங்கள் 10 ஆண்டுகளாக உறுதியாக நின்று போராடுகிறோம். எங்களைக் கவனியுங்கள். திமுக திராவிட இயக்கத்தின் அரசியல் தாய் இயக்கம். இதிலிருந்து வந்த அதிமுக ஒருதுளிதான் திமுகவின் கொள்கையில் இருந்து மாறுபடுகிறது.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.