

வளர்பிறை முக்கிய நாளாக இருந்ததால், எமகண்டத்துக்குப் பிறகு வேட்புமனுத் தாக்கல் செய்யும் அலுவலகங்கள் புதுச்சேரியில் இன்று களைகட்டின.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் அரசியல் கட்சியினர் யாருமே வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. முக்கிய நல்ல நாளான வளர்பிறையான இன்று, பலர் வேட்புமனுத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால், என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக, காங்கிரஸ் என முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களையோ, தொகுதிகளையோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை. காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எமகண்டம் இருந்ததால் அரசியல் கட்சியினர் யாரும் மனுத்தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால் தேர்தல் அலுவலகங்கள் ஆரவாரமின்றி இருந்தன.
ஆனால், நண்பகல் 12 மணிக்கு மேல் புதுவையில் உள்ள அனைத்துத் தேர்தல் அலுவலகங்களும் நிரம்பி வழிந்தன. பிற்பகல் 3 மணி வரை அரசியல் கட்சியினர் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்பாளரையும், தொகுதியையும் அறிவிக்காவிட்டாலும் நல்ல நாள் ராசியை அடிப்படையாக வைத்து பல கட்சியினரும் முக்கிய வேட்பாளர்களும் போட்டி போட்டு மனுத்தாக்கல் செய்தனர்.