

அதிமுக தேர்தல் அறிக்கை மக்களுக்கு முழுமையாகப் பயன் அளிக்கக்கூடியது என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தில் இன்று (மார்ச் 15) மதியம் 1.15 மணி அளவில் தனது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கத்திடம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, வேட்பாளர் உறுதிமொழியைக் கடவுளின் பெயரால் சூளுரைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக தேர்தல் அறிக்கையைப் பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அடித்தட்டு மக்கள் என அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், துணை முதல்வர், நான் உட்பட அனைவரும் ஆலோசித்து தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளோம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக் கூடியதாகத் தேர்தல் அறிக்கை இருக்கிறது.
அதிமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி இருக்கிறேன். தேர்தல் நேரத்தில் மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன். எடப்பாடி தொகுதி மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், மினி கிளினிக், பேருந்து வசதி, கால்நடை மருந்தகங்கள், ரேஷன் கடை உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன்.
எடப்பாடி தொகுதி வறட்சியான பகுதி ஆகும். எனவே, எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் கொண்டுவரும் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி, திட்டத்தைச் செயல்படுத்தி இருக்கிறேன். இதன் மூலம் விவசாயிகளின் பாசனத்துக்கும், பொதுமக்களுக்கு குடிநீர் வசதியும் கிடைத்துள்ளது" என்றார்.
பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நிதிப் பற்றாக்குறை உள்ள நிலையில் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்களை இலவசமாக வழங்க முடியுமா?
அனைத்து மாநிலங்களுக்கும் கடன் சுமை உள்ளது. கடன் பிரச்சினை இல்லாத மாநிலம் எது? கடன் பிரச்சினை இருந்தாலும் வளர்ச்சித் திட்டங்களை தொய்வின்றிச் செய்திருக்கிறோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளீர்களே?
சிறுபான்மை மக்களின் கோரிக்கையை மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதிமுக அரசு சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் அரசாக எப்போதும் இருக்கும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.