

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் அண்மையில் கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது டிடிவி தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிரேமலதா விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ''பக்குவமில்லாத அரசியலைத் தேமுதிக செய்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில்ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
தனது பிரச்சாரத்தையே ரத்து செய்து, விஜயகாந்த் வந்தால்தான் பிரச்சாரம் செல்வேன் என்று கூறி, 41 தொகுதிகளைத் தேமுதிகவுக்குக் கொடுத்து, தேர்தலில் தங்களின் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அந்தப் பக்குவம் எடப்பாடியாரிடம் இல்லை.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பாஜக, பாமக ஆகிய கட்சிகளை அழைத்துப் பேசிவிட்டுக், கடைசியாகத்தான் எங்களை அழைத்தனர். எத்தனையோ முறை சொல்லியும் எங்களின் வார்த்தைகளை அவர்கள் செவிமடுக்கவே இல்லை. தொகுதி, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தாமதம் செய்தனர். உண்மையில் இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்குப் பக்குவம் இல்லை''. என்று பிரேமலதா தெரிவித்தார்.