ஒரே தொகுதியில், ஒரே கூட்டணியிலுள்ள பாஜக -அதிமுக போட்டிப் போட்டு வேட்பு மனு

மனு தாக்கல் செய்ய செல்லும் அதிமுக ஓம்சக்தி சேகர்.
மனு தாக்கல் செய்ய செல்லும் அதிமுக ஓம்சக்தி சேகர்.
Updated on
1 min read

புதுச்சேரியில் ஒரே தொகுதியில் ஒரே கூட்டணியிலுள்ள பாஜக-அதிமுக போட்டிப்போட்டு அடுத்தடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். தங்களுக்குதான் இத்தொகுதி என்று வேட்பு மனு தாக்கல் செய்தோர் தெரிவித்துள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் நாராயணசாமி முதல்வரானார். அதையடுத்து எம்எல்ஏவாக இருந்த ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததால் நெல்லித்தோப்பில் நின்று வென்று முதல்வராக நாராயணசாமி தொடர்ந்தார்.

அதையடுத்து காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமார் போட்டியிட்டு எம்எல்ஏவானார். தற்போது நாராயணசாமிக்கு தொகுதியை தந்த ஜான்குமாரும், அவரது மகன் ரிச்சர்டும் பாஜகவில் இணைந்து விட்டனர். இந்நிலையில் இத்தொகுதி காங்கிரஸ் கூட்டணியில் திமுகவுக்கு இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதியை பாஜகவும், மேற்கு மாநில அதிமுக செயலர் ஓம்சக்தி சேகரும் இத்தொகுதியை கோரி வந்தனர். தொகுதி பங்கீட்டிலும் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில் ஜான்குமாரின் மகன் ரிச்சர்ட் பாஜக நிர்வாகிகளுடன் வந்து நெல்லித்தோப்பு தொகுதிக்கு மனு தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், "பாஜகவுக்குதான் நெல்லித்தோப்பு தொகுதி கிடைக்கும். இரண்டு நாளில் உறுதியாகி விடும். பாஜக வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தும் படிவம் விரைவில் கட்சித்தலைமை அளித்து தாக்கல் செய்வோம். தாமரை மலரும்" என்று குறிப்பிட்டு சென்றார்.

தனது தந்தை ஜான்குமாருடன் மனு தாக்கல் செய்துள்ள ரிச்சர்ட்
தனது தந்தை ஜான்குமாருடன் மனு தாக்கல் செய்துள்ள ரிச்சர்ட்

அதையடுத்து முன்னாள் எம்எல்ஏவும், மேற்கு மாநில அதிமுக செயலருமான ஓம்சக்தி சேகர் அங்கு வந்து மனுதாக்கல் செய்தார். அப்போது அவரது தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுகதான் போட்டியிடுகிறது. அதிமுக வேட்பாளர் என்ற ஒப்புதல் படிவத்துடன் விண்ணப்பித்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

ஒரே தொகுதிக்கு ஒரே கூட்டணியிலுள்ள இரு கட்சியினர் மனு தாக்கல் செய்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in