

ஆளுங்கட்சியைப் போல திமுக வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன் இல்ல திருமண விழா சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் தமிழகம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவினர் ஆளுங்கட்சியைப் போல வெள்ள நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மக்கள் திமுகவை ஆளுங்கட்சியைப் போலவே பார்க்கின்றனர்.
1996-ல் நான் சென்னை மேயராக பொறுப்பேற்ற சில மாதங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 20 நாள்கள் மழை கொட்டியது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வேனில் சென்னை முழுவதும் பயணம் செய்து நிவாரணப் பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், இப்போதைய முதல்வர் தேர்தல் பிரச்சாரம் போல சில இடங்களுக்கு சென்று தி்ரும்பியுள்ளார்.
மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ திமுக சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. ஒரு மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளை பெற்றுள்ளனர். நமக்கு நாமே பயணம் மற்றும் மழை வெள்ள நிவாரணப் பணிகளின் மூலம் மக்கள் நம்மை மீண்டும் ஆட்சியில் அமர்த்த தயாராக உள்ளனர்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.