

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் விஷ்ணு பிரசாத் எம்.பி. தலைமையில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதமும், மாநிலத் தலைவர் கேஎஸ்.அழகிரிக்கு ஆதரவாக மற்றொரு கோஷ்டி போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. மூத்த நிர்வாகிகளான ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், குமாரமங்கலம் ஆகியோரது வாரிசுகள், விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி.யின் மாமனார் ஆலத்தூர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காங்கிரஸ் கட்சியில் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சையது பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் கூறும்போது, ‘‘திமுக கூட்டணியில் 25 இடங்களைப் போராடி வாங்கினோம். இருப்பினும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது போன்றவர்களுக்கு ‘சீட்’ வழங்கியதால் கட்சியில் எங்களைப் போன்று நீண்ட நாட்களாக உழைத்தவர்கள் அதிருப்தியில் உள்ளோம். இது தேர்தல் பணியில் தொய்வை ஏற்படுத்தும்’’ என்றனர்.
தருமபுரியில் கண்டன தீர்மானம்
இந்நிலையில், தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கடந்த 25 ஆண்டுகளாக மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வழிசெய்யாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு கண்டனம் தெரிவிப்பது, வரும் காலங்களில் தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் பெற்றுத் தராவிட்டால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்வது, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் உரிய முறையில் அணுகினால் மட்டுமே, வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் அவர்களுக்காக முழு மனதுடன் தேர்தல் பணியாற்றுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.