

சென்னை கோயம்பேட்டில் உள்ள பாஜகவின்தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார வாகனம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு அளிக்காததால், அதிருப்தியில் இருந்து வந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் திமுகவில் இருந்து விலகி எல்.முருகன் முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கிய முருகன்
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:த்பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (மார்ச் 15) தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் இணையவழியில் நடக்க உள்ளது. திமுக தேர்தல் அறிக்கை பொய்யும் புரட்டும் கொண்ட ஏமாற்று அறிக்கையாக இருக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பொய் சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்ததும் கொள்ளை அடிப்பவர்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ஊழல், நில அபகரிப்பு நடைபெறும். இதனால் திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். அதிமுக சொல்வதை செய்யும். திமுக சொல்வதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது புதியது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து சரவணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "என்னுடைய சேவைக்காக நான் மக்கள் மத்தியில் அறியப்பட்டவன். மாவட்ட செயலாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அவர்களை மீறி என்னால் தன்னிச்சையாக செயல்பட முடியவில்லை. அதனால் பாஜகவில் இணைந்தேன். திமுகவில் இருந்து வெளியேற மாவட்ட செயலாளர்கள்தான் காரணம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்காதபோதிலும் தன்னிச்சையாக அந்த தொகுதியை மாவட்ட செயலாளர்கள் பரிசீலித்தார்கள்" என்றார்.
இந்நிலையில் நேற்று பிற்பகலில் வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் மதுரை வடக்கு தொகுதிக்கு டாக்டர் சரவணனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் காலையில் பாஜகவில் இணைந்தவருக்கு மாலையில் வேட்பாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.