புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு எதிராக தொண்டர்கள் ரகளை: மாநில தலைவருக்கு திமுக கொடி அணிவிக்க முயன்றதால் பதற்றம்

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த மோதல்களை படம் எடுத்த புகைப்படக்காரர்களை தடுத்து வெளியே செல்லுமாறு கூறும் தொண்டர்கள். அருகில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.படம்: செ.ஞானபிரகாஷ்
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த மோதல்களை படம் எடுத்த புகைப்படக்காரர்களை தடுத்து வெளியே செல்லுமாறு கூறும் தொண்டர்கள். அருகில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.படம்: செ.ஞானபிரகாஷ்
Updated on
1 min read

புதுச்சேரியில் திமுகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதால் காங்கிரஸ் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு எதிராக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநில காங்கிரஸ் தலை வருக்கு திமுக கொடி அணிவிக்க முயன்றதால் பிரச்சினை ஏற்பட்டது. துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

புதுவையில் காங்கிரஸூக்கு 15, திமுகவுக்கு 13 தொகுதிகள் எனகூட்டணி பங்கீடு முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் 21, திமுக 9 தொகுதிகளில் போட்டியிட்டன. தற்போது காங்கிரஸூக்கு 6 தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸூக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை திமுவுக்கு கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 15 தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான வேட்பாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேட்பாளர் ஆய்வுக்குழு தலைவர் திக்விஜய் சிங், உறுப்பினர்கள் பிரான்சிஸ்கோ, முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம்ராஜூ, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் இருந்தனர்.

கூட்டத்தில், காங்கிரஸூக்கு ஒதுக்கிய தொகுதிகள் விவரத்தை கூறிய உடனேயே தொண்டர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அப்போது பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் தனது ஆதரவாளர்களோடு மாநில நிர்வாகிகளிடம் கடுமையாக வாதிட்டனர். மங்களம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு தொகுதிகளை திமுகவுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கட்சி அலுவலகத்தில் பதற்றம் அதிகரித்தது. காங்கிரஸ் நிர்வாகிகள் நாற்காலிகளை தூக்கி வீசி தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். அப்போது திமுகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதை கண்டித்து மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனுக்கு திமுக கொடியை போர்த்த முயன்றனர். இதனால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆய்வுக்கு வந்த தலைவர்கள் மேல்தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை வெளியேறும்படி மிரட்டினர். பதிலுக்கு பத்திரிகையாளர்கள் அவர்களோடு வாக்குவாதம் செய்தனர். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். இச்சூழலில் கட்சி அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர்கள் வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து பலரும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குவியத் தொடங்கினர். போலீஸாருடன், துணை ராணுவத்தி னரும் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டனர். பின்னர் ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளாக அழைத்து கட்சித் தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். நண்பகல் தொடங்கிய இம்முயற்சி மதியம் தாண்டியும் நீடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in