

கரோனா பாதிப்பால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா ஓராண்டுக்குப்பிறகு நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது.
கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பரளிக்காடு செல்ல விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி, முன்பதிவு செய்யலாம். பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.550, சிறுவர்களுக்கு கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறும்போது, "கைதேர்ந்த பரிசல் ஓட்டுபவர்களை கொண்டு பாதுகாப்பான பரிசல் பயணம் மற்றும் ஆற்றோரம் சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டு நடைபயணம், ஆற்றில் குளியல் ஆகியவை இந்த சூழல் சுற்றுலாவில் இடம்பெறும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இயற்கையான முறையில், பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட மதிய உணவு, காலையில் வந்தவுடன் சுக்கு காபி வழங்கப்படுகிறது. பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்களை சுற்றுலாப் பயணிகள் எடுத்துவரக்கூடாது. சுற்றுலா தொடர்பான முன்பதிவு குறித்த சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு 9489968480, 9442701530 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.