

ராமநாதபுரத்தில் முதல் கிறிஸ்தவ தேவாலயம் இருநூறு ஆண்டுகால மாக பழமை மாறாமல் உள்ளது. மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக சேதுபதி மன்னர் தேவாலயத்துக்கு வழங்கிய கொடைகளான தேவாலய மணி, பைபிள் ஸ்டாண்டு, சரவிளக்கு இன்றும் பயன்பாட்டில் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் தனுஷ்கோடி, வேதாளை, அரியாங்குண்டு, ஓரியூர் உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன. எனினும், மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகரில், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையின் தளபதி மனுவேல் மார்டின்ஸ் என்ற ஆங்கிலேயரால் முதன்முதலில் இங்கு தேவாலயம் கட்டப்பட்டு கி.பி. 1804-ம் ஆண் டில் பயன்பாட்டுக்கு வந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் அரண்மனை அருகில் வடக்குத் தெருவில் இந்த தேவாலயம் உள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் மற் றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே. ராஜகுரு ‘தி இந்து’ விடம் கூறியது:
கி.பி.1772-இல் ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படைகள் ராமநாதபுரத்தைக் கைப்பற்றி, மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை திருச்சி சிறையில் அடைத்தனர். அதன்பின், ஆற்காடு நவாபுக்கு ஆண்டுதோ றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்புத் தொகையாக (பேஷ்குஷ்) செலுத்த சேதுபதி மன்னர் சம்மதித்தபின், முத்துராமலிங்க சேதுபதி கி.பி. 1781 இல் மீண்டும் மன்னரானார்.
முத்துராமலிங்க சேதுபதியிடம் பேஷ்குஷ் தொகையை மாதா மாதம் பெற்றுக்கொள்ள தளபதி மனுவேல் மார்டின்ஸ் என்ற ஆங்கிலேயரை ராமநாதபுரம் கோட்டையின் தனி அலுவலராக ஆர்க்காடு நவாப் நியமித்தார்.
தளபதி மார்டின்ஸ் தனது மாளிகையின் அருகில் கிறிஸ்து நாதர் ஆலயம் என்ற பிராட்டஸ்டன்ட் சி.எஸ்.ஐ தேவாலயத்தை கட்டினார். இது 1804-ம் ஆண்டு வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டது. இந்த தேவாலயம், சிலுவை வடிவில் இங்கிலாந்து நாட்டு கலைப்பாணியில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி.1961 இல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கல்லறைகள்
தேவாலய வளாகத்தில் உள்ள தளபதி மார்டின்ஸின் கல்லறையில் “கி.பி.1740 இல் பிறந்த தளபதி மார்டின்ஸ் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையில் 50 ஆண்டுகள் பணிபுரிந்து, எழுபதாவது வயதில் கி.பி.1810 அக்டோபர் மாதத்தில் காலமானார்” என்ற செய்தி உள்ளது.
மேலும் சென்னையில் அப்போது ஆட்சியராக இருந்த எல்லிஸ் துரை, கிழக்கிந்தியக் கம்பெனி படையில் லெப்டினென்டாக இருந்த ஹென்றி மில்லர், ரோஜர் சாக்ஸன், அமெரிக்க மிஷனரி போதகர் சில்வா உள்ளிட்டோரின் கல்லறைகளும் இங்கு உள்ளன.
இத்தேவாலய பலிபீடத்தின் மேல் உள்ள ஆறு அடி உயர ஜன்னல் கண்ணாடியில் பெரிய அளவிலான நிற்கும் நிலையில் உள்ள அழகிய இயேசு ஓவியம் ராமநாதபுரத்தில் காலமான கெய் கிளார்க் (GUY CLERK) என்பவரின் நினைவாக அவருடைய நண்பர்களால் 10.07.1881 அன்று வழங்கப்பட்டுள்ளது.
சேதுபதி மன்னரின் காணிக்கை
சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து அழியாப் புகழ் பெற்ற ராஜா பாஸ்கர சேதுபதி மன்னர் சமய நல்லிணக்கத்தை பேணும் விதமாக இந்த தேவாலயத்துக்காக வெண்கலத்தால் ஆன பைபிள் ஸ்டாண்டை 07.04.1896 அன்று வழங்கி உள்ளார். மேலும் தேவாலய மணி மற்றும் வெண்கலத்தாலான சரவிளக்கும் பாஸ்கர சேதுபதியால் தேவாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.