செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு :

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு :

Published on

செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுகவில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 7 தொகுதிகளிலும் திமுகவைச் சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தாம்பரம் - எஸ்.ஆர். ராஜா, சோழிங்கநல்லூர் - ரமேஷ் அரவிந்த். பல்லாவரம் - இ.கருணாநிதி, செங்கல்பட்டு - வரலட்சுமி ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா நான்காவது முறையாக தாம்பரத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்த 3 தொகுதிகளும் திமுக வசம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூர் தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்த கே.பி.கந்தனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2011-ம் ஆண்டு தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் டி.கே.எம் சின்னையா போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். அவருக்கு மீண்டும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் கடந்த முறை தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அவருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக 4 இடங்களிலும் அதிமுக 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மற்ற இடங்களில் கூட்டணி கட்சியிகள் போட்டியிடுகின்றன.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகள் மட்டும் மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in