ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் - காங். - அதிமுக நேருக்கு நேர் மோதல்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் - காங். - அதிமுக நேருக்கு நேர் மோதல்
Updated on
1 min read

ஏப். 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பழனி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த செல்வப்பெருந்தகை ஆகியோர் மீண்டும் இரண்டாவது முறையாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது இந்த தொகுதியில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ராஜீவ்காந்தி நினைவிடம் உள்ளதால் இந்தியாவே உற்று நோக்கும் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் கே.பழனி போட்டியிட்டு 10,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை அதிமுக தன்வசப்படுத்தியது.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த செல்வப்பெருந்தை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் பழனி போட்டியிடுகிறார்.

அதிமுகவிடம் இருந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை மீண்டும் தட்டிப்பறிக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. முன்னதாக கடந்த 1980, 2011, 2016-ம் ஆண்டுகளில் அதிமுகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 1980-ம் ஆண்டில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது 4-வது முறையாக இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

மேலும், அமமுக சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெருமாள், நாம் தமிழர் சார்பில் முனைவர் த.புஷ்பராஜ் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 7-வது முறை

பலமுனை போட்டி என்பதால் இந்த முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களுக்கு சற்று சிரமத்தையே தரும். தொகுதியில் திமுகவினர் தேர்தல் வேலைகளை முனைப்புடன் பார்த்தால் அதிமுகவுக்கு மிகுந்த சவாலாகவே இந்த தேர்தல் முடிவு இருக்கும்.

கடந்த முறை நடந்த தேர்தலில் திமுகவினர் தேர்தல் வேலைகளை பார்க்காமல் இருந்ததால் காங்கிரஸ் தோற்றுப் போனதாக குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் 7 முறை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளது. தற்போது 8-வது முறையாக போட்டியிடுகிறது..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in