

ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் பாடிய தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியின் சுகாதார அலுவலர்(பொறுப்பு) அப்துல் ஜாஃபர். இவர், தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகளவில் இருந்தபோது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து திரைப்பட பாடல்கள் பாணியில் விழிப்புணர்வு பாடல்களை எழுதி, பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாமல், மாநகராட்சியின் விழிப்புணர்வு வாகனங்களில் அப்பாடல்கள் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிக்கப்பட்டன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அப்துல் ஜாஃபர், திரைப்பட பாடல்கள் பாணியில் தேர்தல் விழிப்புணர்வு பாடல்களை எழுதி பாடியுள்ளார். அப்பாடல்களில், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என சரி பார்ப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணவு ஏற்படுத்தியுள்ளார். இப்பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும், அப்துல் ஜாஃபர், சட்டப்பேரவை தேர்தல் மண்டல அலுவலர்களின் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு பாடல் பாடியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என சரி பார்ப்பதன் அவசியம், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பாடியுள்ளார்.