

காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோபிநாத்துக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் கமல்ஹாசன் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதிக்கு வந்தார். அவரை அக்கட்சியின் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ``கட்சி நடத்துவதற்கு பணம் வேண்டும். அதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியின் சார்பாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். அதனால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மேலும் அதிமுக மற்றும் திமுக ஆகியவை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மற்றும் ரூ.1500 அறிவிப்பை ஏற்கெனவே மக்கள் நீதி மையம் வழங்கியுள்ளது.
மக்கள் நீதி மையம் வேட்பாளரை ஆதரித்து தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இந்த வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன்" என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து, காந்தி ரோட்டில் அக்கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கார் மீது தாக்குதல்
கமல் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு காரில் புறப்பட்டு 300 மீட்டர் சென்ற நிலையில் ஒரு நபர் காரின் மீது தாவி குதித்து முன்பக்க கண்ணாடியை ஓங்கி குத்தினார். அதில் காரின் கண்ணாடி உடைந்தது. உடனே பாதுகாவலர்கள் அந்த நபரைப் பிடித்துவிட்டனர். சுற்றியிருந்த தொண்டர்கள் அவரை தாக்கியதில் படுகாயமடைந்தார். போலீஸார் அந்த நபரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.