

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்க இறுதி அறிக்கையை சகாயம் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த முறைகேட்டில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குழு கூறியுள்ளது. சகாயத்தின் பணிக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை மாவட்டத்தில் நடந் துள்ள கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற முதல் அமர்வு, மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்தது. இதை யடுத்து, கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் தலைமையிலான குழு ஆய்வு செய்து, அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்க இறுதி அறிக்கையை சகாயம் குழு தாக்கல் செய்தது.
‘‘மதுரை மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த கிரானைட் முறைகேட்டில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே, பல துறை நிபுணர்களைக் கொண்டு சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். அந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் அனைத்தையும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’’ என்று அந்த குழுவின் வழக்கறிஞர் சுரேஷ் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:
கிரானைட் முறைகேடு தொடர்பாக சிறப்பு அதிகாரி சகாயம் தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்த அறிக்கையை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு வழங்க வேண்டும். அதை ஆய்வு செய்ய தலைமை வழக்கறிஞர் அவகாசம் கேட்டுள்ளார்.
‘தனது விசாரணை அலுவலகத்தை மூட 4 வார அவகாசம் வேண்டும். இதுதொடர் பான பணிகளுக்கு ரூ.5 லட்சம் தேவை’ என்று சகாயம் மனு தாக்கல் செய்துள்ளார். இக் கோரிக்கை ஏற்கப்படுகிறது. கணக்கை சரிபார்த்து அத்தொ கையை அரசு ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும். சகாயத்தின் அலுவலகம், அங்குள்ள அதிகாரிகள், வாக்குமூலம் அளித்த வர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள், ஊழலை அம்பலப்படுத்தியவர்கள் உட்பட யாருக்கும் எந்த பிரச்சி னையும் வரக்கூடாது. குழு கேட்டுக் கொண்டால் இவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
விசாரணைக்காக பல துறைகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள், இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், அவற்றை அந்தந்த துறையிடம் திருப்பித் தந்துவிடலாம். மற்ற ஆவணங்களை உயர் நீதிமன்ற பதிவுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவற்றை யார் பாதுகாப்பாக வைத்திருப்பது என்று பின்னர் தெரிவிக்கப்படும். அரசின் ஆய்வுக்கு தேவைப்படும் ஆவணங்களை கேட்டுப் பெறலாம். சிறப்பு அதிகாரியின் பணி பாராட்டுக்குரியது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் நகலை அமலாக்கப் பிரிவு சிறப்பு இயக்குநர், கனிமவளத் துறை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
‘கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) போன்ற பொதுத்துறை நிறுவனம் போல தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) செயல்பட வேண்டும். கிரானைட் குவாரி பணியாளர்களை தமிழ்நாடு கனிம நிறுவனமே நியமிக்க வேண்டும்’ என்பது உட்பட 22 பரிந்துரைகளை சகாயம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த கிரானைட் முறைகேட்டால் அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.