ஏரிகள் நிரம்பியதால் வெள்ள பாதிப்பு தொடரும் அபாயம்: சென்னை, புறநகர்களில் மீட்புப் பணிகள் தீவிரம்

ஏரிகள் நிரம்பியதால் வெள்ள பாதிப்பு தொடரும் அபாயம்: சென்னை, புறநகர்களில் மீட்புப் பணிகள் தீவிரம்
Updated on
2 min read

ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கினர்; பால், காய்கறி, உணவுப் பொருட்கள் தட்டுபபாடு

*

மழை நின்றாலும் சென்னை, புறநகர் பகுதிகள் வெள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. தீவுகளாக மாறிய குடியிருப்பு பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணி தொடர்கிறது. மீட்புப் பணியில் தமிழக அரசுடன் இணைந்து ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தொடர் மழையால் பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அத்துடன், வங்கக்கடலில் உரு வான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில தினங்களாக வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி மறுநாள் காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும், பெரும்பாலான ஏரிகள் நிரம்பியதால் அவற்றில் இருந்து வெளியேறிய உபரி நீர், கிராமங் களுக்குள் புகுந்தது. சில இடங் களில் ஏரிகள் உடைந்து வெள்ளம் வெளியேறியது. சாலைகள் துண்டிக் கப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீட்டை விட்டு வெளியேற முடியாததால் சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக் கப்பட்டனர்.

வெள்ளத்தில் சிக்கித் தவித்த வர்களை மீட்கும் பணியில் தமிழக அரசுடன் இணைந்து ராணுவ வீரர்கள், கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர். சென்னை வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப் பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக சிறுகளத்தூர், அனகாபுத்தூர், பொழிச்சலூர், நந்தம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பூண்டி ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சீரானது

இதற்கிடையே, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தெற்கு ஆந்திரா நோக்கி சென்றதால் சென்னை, புறநகர் பகுதிகளில் மழை ஓய்ந்து, நேற்று காலை முதல் வெயில் அடிக்கத் தொடங்கியது. சாலைகளில் தேங்கிய நீர் அகற்றப் பட்டு, போக்குவரத்து சீர்செய்யப் பட்டது. மின் விநியோகப் பணிகளும் தொடங்கியுள்ளன.

மழை நின்றாலும், பெரும் பாலான இடங்களில் வெள்ளம் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை.

ஏரிகள் நிரம்பி வழிவதால் மீண்டும் வீடுகளில் வெள்ளம் புகுமோ என்ற பீதியில் மக்கள் தவித்து வருகின்றனர். பெரிய ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், எச்சரிக் கையுடன் இருக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது. பல்வேறு துறை ஊழியர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பால், காய்கறி தட்டுப்பாடு

கடந்த 3 நாட்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்தவர்கள், மழை நின்றதால் நேற்று வெளியில் வந்து உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர். மீண்டும் மழை வருமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை அதிகமாக வாங்கிச் சென்றனர். அதே நேரத்தில், வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை யும் அதிகரித்துள்ளது. பால் விநியோகமும் பாதிக்கப் பட்டுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது.

4 மாவட்டங்களில் இன்றும் விடுமுறை:

மழை நின்றாலும் பெரும்பாலான இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. சில இடங்களில் போக்குவரத்தும் சீராகவில்லை. வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in