வாக்குகளுக்காக அல்லாமல் உண்மையில் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்குங்கள்: விஜயகாந்த்

வாக்குகளுக்காக அல்லாமல் உண்மையில் பாதித்தோருக்கு நிவாரணம் வழங்குங்கள்: விஜயகாந்த்
Updated on
1 min read

வாக்குகளுக்காக நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு, உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் நிவாரண உதவிகளையும், இழப்பீடுகளையும் வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் மழை, வெள்ள சேதங்கள் தவிர்க்க இயலாதது என்று முதல்வர் திரும்பத் திரும்ப சொல்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் தான் பாதிப்புகள் குறைந்துள்ளது என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு பிறகும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர் பந்தல் என்னுமிடத்தில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி, சாலைகளும், வீடுகளும் மூழ்கியுள்ளன.

பலமுறை அப்பகுதி மக்கள் புகார் கூறியும், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற கோரியும் வெளியேற்றவில்லை. தேமுதிக சார்பில் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தும் அதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அந்த பகுதியை பார்க்க நான் வருகிறேன் என்பதை தெரிந்து கொண்டதும், இப்போது நீரை வெளியேற்றியுள்ளனர்.

2004-ல் சுனாமி பேரழிவும், 2005-ல் புயல், மழை, வெள்ளமும், 2011-ல் தானே புயலும், 2015ல் வெள்ளமும் ஏற்பட்டு பேரழிவுகள் நடந்துள்ளன. இத்தனை பேரழிவுகளை சந்தித்தும் அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. ஒரிஸா மாநிலத்தை 1999-ம் ஆண்டு புயல் தாக்கியது. இந்த அனுபவம் அம்மாநிலத்தை பாய்லின் புயலிலிருந்து காப்பாற்றியது. அப்போது, சுமார் 11.5 லட்சம் குடும்பங்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே வானிலை ஆராய்ச்சி மையம் இதுபோன்ற பேரழிவு ஏற்படுமென்று எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், முன் நடவடிக்கைகள் எடுக்காததால் பேரழிவு ஏற்பட்டது. மத்திய தலைமை கணக்கு அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் பேரிடர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் தமிழ்நாடு இல்லை என்று 2012-ல் கூறினார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி காலங்களில் சுய அரசியல் லாபத்துக்காகவும், வாக்கு வங்கி அரசியலாலும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. இயற்கைக்கு எதிரான செயல்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்தேறி வந்ததற்கு 2 ஆட்சிகளும் துணை போயுள்ளன.

2009ஆம் ஆண்டு ஆசிய நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து கனடாவை சேர்ந்த திட்ட அலுவலர் ராஃப் ஸ்டோரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு ஆய்வுகள் செய்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு அளித்த அறிக்கையை 2 ஆட்சிகளும் துச்சமாக நினைத்து கிடப்பில் போட்டதும் இந்த பேரழிவுக்கு காரணம்.

வாக்குகளுக்காக நிவாரணம் வழங்குவதை விட்டுவிட்டு, உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடும் வகையில் நிவாரண உதவிகளையும், இழப்பீடுகளையும் வழங்க வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in