Published : 14 Mar 2021 07:15 PM
Last Updated : 14 Mar 2021 07:15 PM

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.7,500 உழவு மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கை

விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500/- உழவு மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதை அடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக நேற்று 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக இன்று வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளை பொருட்களுக்கு தமிழக அரசின் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.

* விவசாய மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும்

* வாழை விவசாயிகளின் வாழ்வு சிறக்க வாழையிலிருந்து நூல் எடுத்து ஆடை நெய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்படும். இதனால் கிராமப்புற வேலை வாய்ப்புகள் பெருகும்.

* அனைத்து நீர்நிலைகளின் கரைகளிலும், குறிப்பாக குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நீர் நிலைகளின் கரைகளிலும், அரசு புறம்போக்கு நிலங்களிலும், கடலோர மாவட்ட சாலை ஓரங்களிலும் தமிழ்நாட்டின் சின்னமான பனை மரங்கள் வளர்க்கப்படும்.

* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த குளிர்சாதனக் கிடங்கு மற்றும் பதப்படுத்தப்படும் கூடங்கள் அமைக்கப்படும். இக்கூடங்களை கண்டறிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் விவசாயிகள் கிடங்கை சென்றடையும் வகையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

* சூரிய சக்தியின் மூலம் இயங்கும் மின் மோட்டார் பம்புகளின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். மேலும் தற்போது வழங்கப்பட்டு வரும் அதற்கான மானியம் உயர்த்தி வழங்கப்படும்.

* விவசாயிகளின் உற்பத்தியைப் பெருக்கவும், அதற்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7,500/- உழவு மானியம் வழங்கப்படும்.

* வேளாண் துறையில் உள்ள சவால்களை ஆராய்ந்து, அவற்றை எதிர்கொள்ள தேவையான உத்திகளையும், திட்டங்களையும் உடனுக்குடன் தீட்டி, வேளாண் தொழிலை மேலும், லாபகரமாக ஆக்கி, வேளாண் பெருமக்களின் நலன் காக்க மாநில வேளாண்மை ஆணையம் அமைக்கப்படும்.

நெல் மற்றும் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை

* கோதுமைக்கு வழங்கி வரும் ஆதார விலைக்கு இணையாக நெல்லுக்கும் உயர்த்தி தரவேண்டும் என்று மைய அரசை வலியுறுத்துவோம்.

* நெல்லுக்கான உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கு வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

* கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவைக் கவனத்தில் கொண்டு, கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, கரும்புக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

* வேளாண் விளைபொருள் உற்பத்தி மற்றும் இலாபகரமான விவசாய விற்பனை நெறிமுறை மற்றும் வழிகாட்டும் அமைப்பு (Guidance and Regulatory Bureau for demand based Agricultural Production & Remunerative Marketing) ஏற்படுத்தித் தர உறுதியளிக்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x