

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிமுகவில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான எஸ்.நாகராஜனுக்கு மீண்டும் சீட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றியக் கவுன்சிலர் முருகன் திமுகவிற்கு மாறினார். இதனால் இளையான்குடி ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மானாமதுரை (தனி) தொகுதியில் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.நாகராஜன் வெற்றி பெற்றார். அவருக்கே இந்த தேர்தலிலும் மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவருக்கே மீண்டும் சீட் கொடுத்ததாக கூறி இளையான்குடி அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் வே.முருகன் திமுகவிற்கு மாறினார்.
அவரும், அவரது மனைவியும், பெரும்பச்சேரி ஊராட்சித் தலைவருமான சாவித்ரியும் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்எல்ஏ மதியரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல் கோட்டையூர் ஊராட்சித் தலைவர் அனிதா, முன்னாள் ஊராட்சித் தலைவர் சைமன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் பாஸ்கரன் ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
தற்போது இளையான்குடி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முனியாண்டி உள்ளார். மேலும் அதிமுகவிற்கு 9 கவுன்சிலர்கள் ஆதரவும், திமுகவிற்கு 7 கவுன்சிலர்கள் ஆதரவும் உள்ளன. தற்போது அதிமுக ஒன்றியக் கவுன்சிலர் திமுகவிற்கு மாறியதால் இளையான்குடி ஒன்றியக் குழுவில் அதிமுக, திமுக சமபலமாக மாறியுள்ளது.
மேலும் அதிமுகவைச் சேர்ந்த ஒரு கவுன்சிலர் திமுக மாறுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அதிமுக ஒன்றியக்குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.