

2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் விலையில்லா அம்மா வாஷிங் மெஷின் மற்றும் சோலார் அடுப்பு வழங்கப்படும் என்று அதிமுக வாக்குறுதி அறித்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுவதை அடுத்து, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக நேற்று 500-க்கு மேற்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக இன்று வெளியிட்டனர்.
அதில், 2021 தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் விலையில்லா அம்மா வாஷிங் மெஷின் மற்றும் சோலார் அடுப்பு வழங்கப்படும் என்று அதிமுக வாக்குறுதி அறித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். இது சாத்தியமா என்று கேள்வி எழுந்தது. எனினும் தேர்தலில் வெற்றி பெற்று அதைச் சாத்தியப்படுத்தியும் காட்டினார் ஜெயலலிதா. முன்னதாக 2006-ம் ஆண்டு திமுக அரசில் இலவச வண்ணத் தொலைக்காட்சி அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது.