Published : 14 Mar 2021 04:21 PM
Last Updated : 14 Mar 2021 04:21 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டை போல் அதிமுக சிதறிவிடும்: டிடிவி தினகரன் ஆரூடம் 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டை போல் அதிமுக சிதறிவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுகிழமை அன்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வரும் 15-ம் தேதி (இன்று) மதியம் 1.30 – 2 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். அன்று மாலை, கோவில்பட்டியில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறேன். அமமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எங்களது தேர்தல் அறிக்கையில், மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிவிக்கவில்லை. நாங்கள், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற, வளர்ச்சி அடைய நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம். அமமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

அதிகார துஷ்பிரயோகம்

அமைச்சர் கடம்பூர் ராஜு வாகனத்தை சோதனையிட்ட அதிகாரி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு, அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுகிறார் என்றால், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதற்கு உதராணமாக இருக்கிறது. அவர்கள் என்ன செய்தாலும், அமமுகவை கோவில்பட்டி மக்கள் வெற்றி பெற செய்வார்கள். திமுக சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களில் எத்தனை திட்டங்களை நிறைவேற்றி உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என தவிக்கின்றனர். அது தேர்தல் அறிக்கையிலும் தெரியவருகிறது.

அனைத்து துறைகளிலம் ஊழல்

எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க மத்திய அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைத்து இருக்கிறது. இவர்கள் என்ன புதியதாக அமைக்கபோகிறார்கள். கோபாலபுரம் கோர்ட்டா என தெரியவில்லை. அமமுக தொடங்கியதன் முதல் நோக்கமே, அதிமுகவை மிட்டெடுக்கதான். இப்போதும் அந்த பணியை தொடர்கிறோம். அதிமுகவில் உள்ளவர்களின் ஊழல் குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்களது ஊழலை வரிசைப்படுத்த முடியாது. கரோனா காலக்கட்டத்தில் கூட முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. அனைத்து துறைகளிலும் ஊழல். முதல்வர் பழனிசாமி பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

சசிகலாவிடம் வலியுறுத்தப்படும்

ஆட்சி இருக்கும் வரைக்குதான் அதிமுக கட்சி இருக்கும். அதன்பிறகு நெல்லிக்காய் மூட்டையை சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் எங்களுடன் இணைவார்கள். அதிமுகவை மீட்டெடுப்போம். தேர்தலுக்கு பிறகு அரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து சசிகலாதான் முடிவெடுக்க வேண்டும். அவர், அரசியலை விட்டு ஒதுக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தப்படும்.

மாற்று சக்தியாக அமமுக

பண மூட்டையை நம்பிதான் ஆளுங்கட்சியினர் தேர்தலில் நிற்கின்றனர். அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது என மக்களுக்கும் தெரியும். பணத்தை மட்டும் நம்பி தேர்தலில் போட்டியிட்டால், என்ன நிலை ஏற்படும் என இந்த தேர்தல் முடிவின் மூலம் தெரியவரும். அதேபோல், 10 ஆண்டுகளாக தவியாய் தவித்து வரும் திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகம் எப்படி பாதிக்கப்படும் என மக்களுக்கும் தெரியும். மாற்று சக்தியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று சக்தியாக அமமுக கூட்டணி இருக்கும். ஆர்கே நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கவில்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x