

காங்கிரஸ் அலுவலக தெருவில் வரிசைக்கட்சி நான்கு மணி நேரம் நின்ற கார்களால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் நகரின் முக்கிய பகுதியில் வைசியால் வீதியில் உள்ளது. அலுவலகத்தை சுற்றி வீடுகள், கடைகள், கண் மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.
காங்கிரஸ் வேட்பாளர்களின் ஆய்வுக்கூட்டத்துக்காக அக்குழுவின் தலைவர் திக் விஜய்சிங், உறுப்பினர் பிரான்சிஸ்கோ, சர்தின்ஹா, புதுச்சேரி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, செயலர் சஞ்சய் தத், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். கட்சியினரும் பலரும் வந்தனர். அவர்கள் வந்த 7 கார்கள் வரிசையாக வைசியால் வீதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் உள்ளிட்ட பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸாரும், மத்திய படையினரும் அங்கு வந்தனர். தெரு முனைகளில் தடுப்புகள் வைத்து போலீஸார் தடுத்து தெருவினுள் யாரையும் அனுமதிக்கவில்லை.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சுமார் நான்கு மணி நேரம் தெருவில் கார்கள் வரிசையாக நின்றதால் இப்பகுதியில் குடியிருப்போர், மருத்துவமனைக்கு வருவோர், கடைக்கு செல்வோம் என பலரும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். மதியம் 3 மணியளவில் உணவு சாப்பிடும் நேரத்தின்போதுதான் அக்கார்கள் எடுக்கப்பட்டு மக்கள் செல்ல வழி கிடைத்தது.