

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டியிடுகிறார்.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் மார்ச் 12-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்நிலையில், 6 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசியத் தேர்தல் குழு இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி,
ஆயிரம் விளக்கு- குஷ்பு
கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி
தாராபுரம்- எல்.முருகன்
அரவக்குறிச்சி- அண்ணாமலை
காரைக்குடி - ஹெச்.ராஜா
ஆகியோர் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.
இதில் நடிகை குஷ்பு அண்மையில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தார். வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிரணித் தலைவராக உள்ளார். பாஜக மாநிலத் தலைவராக எல்.முருனும் துணைத் தலைவர்களாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் எம்.ஆர்.காந்தி முதல் பதவி வகிக்கின்றனர். எச்.ராஜா முன்னாள் தேசியச் செயலாளராக இருந்தார்.
இதில் குஷ்பு திமுகவைச் சேர்ந்த எழிலனை எதிர்த்துக் களம் காண்கிறார். அதேபோல, அண்ணாமலை- திமுக இளங்கோவை எதிர்த்தும் வானதி சீனிவாசன் - காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாரை எதிர்த்தும் போட்டியிடுகின்றனர்.
காரைக்குடியில் ஹெச்.ராஜா- காங்கிரஸ் மாங்குடி, தாராபுரத்தில் எல்.முருகன்- திமுக கயல்விழி செல்வராஜ், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி- திமுக சுரேஷ் ராஜன் போட்டியிடுகின்றனர்.
எம்.ஆர்.காந்தி தவிர பிற வேட்பாளர்கள், பெருவாரியான மக்கள் அறிந்த நட்சத்திர வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.