

கரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளதால் கடந்த பிப். 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கும் வகையில் கரூர் மாவட்டம் முழுவதும் 18 பறக்கும் படையினரும், 18 நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரும், 4 தேர்தல் பிரச்சாரங்களை வீடியோ எடுக்கும் குழுவினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை குழு 4 அலுவலர் கவிதா தலைமையில் கரூர் அருகேயுள்ள மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே இன்று (மார்ச் 14) அதிகாலை 4 மணிக்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாமக்கல் மாவட்டம் லத்துவாடி பகுதியை சேர்ந்த என்.கே.சுப்பிரமணியன் என்பவர் முட்டை லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.5,25,025 தொகையை கொண்டு சென்றார். அதைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கரூர் வட்டாட்சியர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அவர் அதனைச் சார்நிலைக் கருவூலத்தில் சேர்ப்பித்தார்.