

கரூர் எம்.பி.ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜான்சிராணி, நிலக்கோட்டை தொகுதியில், தன் பாட்டி பொன்னம்மாள், 7 முறை எம்எல்ஏவாக இருந்தபோதிலும் தனக்கு வாய்ப்பளிக்கப்படாதது புறக்கணிக்கும் விதமாக இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அக்கட்சியின் எம்.பி. விஷ்ணு பிரசாத் கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்குவதாக குற்றம் சாட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, ஜோதிமணியும் காங்கிரஸ் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவர் தனது ட்விட்டர் பதிவில், ''காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி, வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன. தட்டிக் கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் ரத்தத்தைக் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலைச் செவி மடுக்கவில்லை
உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண் முன்னால் இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு எனது ரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன். நடப்பது நடக்கட்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.
ஜோதிமணியின் பதிவுகள் சர்ச்சைகளை ஏற்படுத்தின. இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, ஜோதிமணியின் அராஜக அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் கட்சியைக் களங்கப்படுத்துகிற ஜோதிமணி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 2016 கரூர் சட்டப்பேரவைத் தேர்தலில் 401 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பேங்க் சுப்பிரமணியத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்து பழிவாங்கிய ஜோதிமணி, தொண்டர்களுக்காக ரத்தம் கொதிப்பதாக கூறுவது ஒரு அரசியல் மோசடி.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி, வேட்பாளர் தேர்வு பல்வேறு கட்டங்களாக வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்றுள்ளது. தனிப்பட்ட எந்தத் தலைவரும் முடிவெடுக்க முடியாத நிலையில், எந்தத் தவறும் நடக்க வாய்ப்பில்லாத ஜனநாயக நடைமுறையைக் கொச்சைப்படுத்துவது அப்பட்டமான கட்சி விரோதச் செயல் அல்லவா? என்று கோபண்ணா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.