

புதுச்சேரியின் நோயாக அநாகரீக அரசியல் இருக்கிறது, புதுச்சேரிக்கு ஆன்மீக அரசியல் தான் முக்கியம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர் கூறியதாவது:
“புதுச்சேரியில் அரசியல் ஸ்திரத்தன்மையின்றி இருக்கிறது.காரணம் மத்திய-மாநில அரசுக்கு சுமூகமான உறவு இல்லை. அதிகார போட்டியால் மாநில வளர்ச்சி இல்லை. ஆட்சி முடியும் நிலையில் அவசரமாக புதுச்சேரியில் ஆட்சியை கலைத்தது அநாகரீக செயல். இது நாராயணசாமிக்கு தேவையின்றி அனுதாபத்தை தேடி தந்துள்ளனர். அநாகரீக அரசியல் புதுச்சேரியில் நோயாக இருக்கிறது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது.இதை செய்பவர்கள் அரசியலில் கோலோச்ச விரும்புகிறார்கள்.
புதுச்சேரிக்கு ஆன்மீக அரசியல் தான் முக்கியம்.
தமிழிசை திறமையானவர்.அவர் வந்தது முதல் திட்டப்பணிகள் தொடர்கின்றன.புதுச்சேரியில் நல்ல ஆட்சி அமைய வேண்டும். நல்ல மாற்றம் வர வேண்டும். ரங்கசாமி நல்ல சிவனாடியாராக இருக்கிறார். அவரை சந்தித்து புதுச்சேரியில் ஆன்மீக அரசியலை வளர்க்க வலியுறுத்துவோம்.
மணக்குள விநாயகர் கோயிலிலே யானை வைத்திருக்க வேண்டும்,விவேகானந்தருக்கு சிலை வைக்க வேண்டும், புதுச்சேரி என்றால் மதுச்சேரி என்ற நிலை மாற பூரண மது விலக்கு அவசியம்" என வலியுறுத்தினார்.