

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வுக்குழு தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், புதுச்சேரி மங்கலம் சட்டப்பேரவை தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்காமல், திமுகவிற்கு ஒதுக்கியதைக் கண்டித்து, மங்கலம் தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இருக்கைகள் வீசப்பட்டன.
இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பதற்றமாகச் சூழல் ஏற்பட்டது. திமுக கொடியை நிர்வாகிகள் மீது போர்த்த முயன்றனர்.
மேலிட நிர்வாகிகள், நாராயணசாமி ஆகியோர் கட்சி அலுவலக மாடிக்கு சென்றனர். தொடர்ந்து இந்த ரகளை காரணமாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு துணை ராணுவ படையினர் பாதுகாப்பு கருதிக் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு மாடியில் இருந்து இறங்கி வந்த நிர்வாகிகள், நாராயணசாமி ஆகியோர் பத்திரிக்கையாளர்களை வெளியேற கூறினர்.