Published : 14 Mar 2021 12:18 PM
Last Updated : 14 Mar 2021 12:18 PM

எடப்பாடி பழனிசாமியே தேர்தலில் தோற்பார்; அதன் பின்னர் என்ன நிலைக்கு ஆளாவாரோ தெரியாது?- ஸ்டாலின் பேச்சு

சென்னை

திராவிட மண்ணான தமிழ்நாட்டில் இனி எந்தக் காலத்திலும் அதிமுகவும் ஆட்சிக்கு வரமுடியாது, அதன் மூலமாக உள்ளே நுழைந்து விடலாம் என்ற பாஜகவின் திட்டமும் பலிக்காது என்று ஸ்டாலின் பேசினார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசியதாவது:

இந்த நிகழ்ச்சிக்கு சற்று களைப்பாக வந்திருக்கிறேன். காரணம் என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேர்தல் பணிகளில் முழுமையாக நான் ஈடுபட்டிருக்கும் காரணத்தால் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசுவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதுவும் மெகா கூட்டணியாக அமைந்திருக்கும் கட்சிகளுடன் நாங்கள் கலந்து பேசி அந்தப் பணியை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.

அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு. அதையும் வெற்றிகரமாக முடித்து நேற்றைய தினம் அதனை வெளியிட்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து இன்றைக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கேட்ட பலருக்கு அந்த வாய்ப்பை வழங்க முடியாத காரணத்தால், அவர்களை அழைத்து ஊக்கப்படுத்தும் வகையில், சமாதானம் செய்யும் பணியினையும் நிறைவேற்றி வருகிறேன்.

நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் பழனிசாமி வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து, அவர் பேசும் போது, ‘என்னுடன் விவாத நிகழ்ச்சியில் ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா?’ என்ற ஒரு கேள்விக் கணையைத் தொடுத்திருக்கிறார். நான் அதையெல்லாம் பேசி அரசியலாக்க விரும்பவில்லை.

நான் முன்னரே அதற்கு பதில் சொல்லி இருக்கிறேன். ‘என்னை விவாதத்திற்கு வருமாறு நீங்கள் அழைத்திருக்கிறீர்கள். நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தடையைத் திரும்பப் பெற்ற பிறகு நீங்கள் குறிப்பிடும் இடத்திற்கு நான் வரத் தயார் என்று அப்போதே சொல்லி இருக்கிறேன். அதற்கு இதுவரை அவர் பதில் சொல்லவில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் இப்போது கேட்கும் கேள்வி, என்னை அழைத்து விவாதிக்கத் தயாரா என்று கேட்பதை விட, தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவாக இருக்கக் கூடிய நிலையில், நீங்கள் வெளியிட்டிருக்கும் அந்தப் பட்டியலில் ஏன் தமிழ்நாடு இடம்பெறவில்லை என்று உங்களை பழனிசாமி கேட்டிருந்தால் நான் பாராட்டி இருப்பேன்.

அதற்கு அவருக்குத் தகுதி இல்லாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. இன்னும் ஒருமாதத்தில் முடியப் போகும் நிலையில்தான் பழனிசாமியின் ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்படப் போகிறது.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், எடப்பாடி தொகுதியில் கூட முதல்வர் பழனிசாமி நிச்சயமாக வெற்றி பெற முடியாத நிலையில்தான் இருக்கிறார். எல்லாம் முடிந்த பிறகு என்ன நிலைக்கு அவர் ஆளாகப்போகிறார் என்பது பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரையில் - இந்த ஆட்சியை பொறுத்தவரையில் கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் என்ற நிலையில்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆளுநரிடம் முதலமைச்சரிலிருந்து கடைசியில் இருக்கும் அமைச்சர் வரை செய்திருக்கும் ஊழல்களை பற்றி எல்லாம் - பொத்தாம் பொதுவாக அல்ல - ஆதாரங்களோடு மனுவாக கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அது ஒரு பக்கம். குறிப்பாக முதல்வரைப் பற்றி சொல்லவேண்டும் என்று சொன்னால் அவருடைய துறையான நெடுஞ்சாலைத்துறையில் ஏறக்குறைய 3000 கோடி ரூபாய் வரையில் தன்னுடைய சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டரை சாதகமாக வழங்கி அதில் ஊழல் செய்திருக்கிறார் என்று எங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் - அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு இதில் முறையாக விசாரிக்கப்பட்டு எல்லாம் முகாந்திரமும் இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. தான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது.

உத்தரவு போட்ட அடுத்த நாளே முதல்வர் பழனிசாமி உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றிருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. அதனால்தான் நாங்கள் தேர்தல் அறிக்கையில் இன்றைக்கு குறிப்பிட்டு இருக்கிறோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வரிலிருந்து - அமைச்சர்கள் வரையில் இருக்கும் ஊழல்களைப் பற்றி விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று ஒரு வாக்குறுதியும் வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு இருக்கும் ஆட்சியைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் தயவுவோடு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது நாட்டிற்கு நன்றாகத் தெரியும். எனவே ஆட்சி மாற்றம் மட்டுமல்ல, தொடர்ந்து 5 ஆண்டு அல்ல, 10 ஆண்டு அல்ல, தொடர்ந்து தமிழ்நாட்டை திமுகதான் இனி ஆளப் போகிறது என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் பாஜக - அதிமுக ஆட்சியின் மூலமாக எப்படியாவது உள்ளே நுழைந்து விடலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியும் வர முடியாது. பாஜககவும் வர முடியாது. காரணம், இது திராவிட மண். பெரியார் - அண்ணா - தலைவர் கருணாநிதி வாழ்ந்த மண், இந்த மண். எனவே எந்த காலத்திலும் முடியாது”.


இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x