Published : 14 Mar 2021 11:55 AM
Last Updated : 14 Mar 2021 11:55 AM

அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகிறது: முக்கிய அறிவிப்புகள் வர உள்ளதாக தகவல்

திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியான நிலையில் இன்று அதிமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை 7 மணி அளவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வெளியிட உள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வோர் அரசியல் கட்சியும் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், அல்லது தங்கள் கட்சி கூட்டணியில் இருந்தால் இந்தவகையான மக்கள் பிரச்சினைகளை தீர்ப்போம், இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி போன்று அளிப்பார்கள்.

இதில் முக்கிய பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும்போது குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றை தேர்தல் அறிக்கை போல் அளிப்பதும் உண்டு. தேர்தல் அறிக்கையில் மக்கள் முக்கியமாக எதிர்ப்பார்ப்பது ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் என்னென்ன வாக்குறுதிகள் அளிப்பார்கள் என்பதே.

அதிலும் சமீப கால தேர்தல் அறிக்கைகள் தேர்வு வினாத்தாள் போன்று மிகக்கவனமாக ரகசியமாக தயாரிக்கப்படுகிறது. அதில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியில் ஆரம்பித்து இலவச மடிக்கணினி வரை ஏழை மக்களுக்கு பயன்தரும் வகையில் அளிக்கப்படும் விலையில்லா பொருட்கள் போன்று எந்தக்கட்சி என்ன? அறிவிக்கிறார்கள் என்கிற எதிர்ப்பார்ப்பும் இருக்கும்.

நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத கட்சி நாங்கள் ஆட்சிக்கு வரும்போது அதை செய்வோம் இதைச் செய்வோம் என தைரியமாக வாக்குறுதி அளிக்க முடியும். அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அடித்தட்டு மக்களை, இளைஞர்களை கவரும் பல அறிவிப்புகள் உள்ளன. தேர்தல் வென்று ஆட்சியமைத்தால் ஜூன். 3 அன்று கரோனா நிவாரண நிதி ரூ.4000 குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் என்கிற அறிவிப்பு பொதுமக்களிடையே எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அதேப்போன்று நகர கட்டமைப்பு, அரசு ஊழியர், போலீஸாருக்கு அளிக்கப்படும் சலுகைகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இவைகளை மீறி இன்று வெளியாகும் அதிமுக தேர்தல் அறிக்கை புதிய கவர்ச்சிகர திட்டங்களை வெளியிட வேண்டும்.

அதிமுகவுக்கு உள்ள இன்னொரு சிக்கல் இதுவரை பத்தாண்டுகள் ஆட்சியிலிருந்தபோது செய்யாமல் இனிமேல் தான் செய்ய போகிறீர்களா என்கிற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் வைக்கும் என்பதால் அதையும் தாண்டிய அறிவிப்புகள் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே இல்லத்தரசிகளுக்கு மாதம் 1500 ரூபாய், 6 மாதம் கேஸ் சிலிண்டர் இலவசம் என அறிவிப்பு வெளியான நிலையில், இன்று வெளியிடப்படும் தேர்தல் அறிக்கை பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x