மக்களிடம் எழுச்சி இருக்கிறது; ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்- உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

மக்களிடம் எழுச்சி இருக்கிறது; ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்- உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

மக்களிடம் நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த எழுச்சி இப்போதும் இருப்பதாகச் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாகச் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகிறார். முன்னதாக அவர் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளதால் போட்டியிட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் நேர்காணலில் உதயநிதி பங்கேற்ற நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தொகுதியில் உதயநிதி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். முன்பு இருந்த அதே அளவு எழுச்சி இப்போதும் மக்களிடையே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். உதய சூரியன் ஜெயிப்பதும் திமுக வெற்றி பெறுவதும்தான் எங்களின் முழக்கம். நீங்களே மக்களின் வரவேற்பைப் பார்த்திருப்பீர்கள். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மக்கள் நன்றாக வரவேற்கிறார்கள். இது கருணாநிதி இரண்டு முறை வெற்றி பெற்ற தொகுதி. மாவட்டச் செயலாளர் அன்பழகன் வெற்றி பெற்ற தொகுதி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டேன். மக்கள் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராக உள்ளார்கள். தொகுதிக்குள் முழுமையாக சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்பேன். எல்லா வேட்பாளர்களும் எல்லாத் தொகுதிகளிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

கண்டிப்பாகத் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன். பிற தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய நாளை கிளம்புகிறேன்'' என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in