Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

தமிழ் கலாச்சாரத்தின் உயிர் நாடியான கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தல்

தமிழ் கலாச்சாரத்தின் உயிர் நாடியான கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை பாதுகாக்கும் நோக்கில் ‘கோவில் அடிமை நிறுத்து’ (#FreeTNTemples) என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில், ஈஷாஅறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன் திரைப்பட நடிகர் சந்தானம் கலந்துரையாடினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார். அதன் விவரம்:

மக்கள் நலன் சார்ந்த பல பிரச்சினை இருக்கும்போது கோயில்களை மீட்டெடுப்பது தேவையா?

தமிழ் கலாச்சாரத்தின் உயிர் நாடியாக விளங்குபவை கோயில்கள். வருமானம் இல்லாமல் 11,999 கோயில்களில் ஒருகால பூஜைகூட நடக்கவில்லை. மக்கள்தொகை அதிகரித்தும், அதற்கேற்ப புதிய கோயில்கள் கட்டப்படவில்லை. பழைய கோயில்கள் பராமரிக்கப்படவில்லை. இவற்றை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது.

கோயில்களை மீட்டு யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?

87 சதவீதம் உள்ள இந்து சமுதாயத்தில் நேர்மையானவர்கள், திறமையானவர்கள் 20 பேர் இருக்கமாட்டார்களா? நேர்மையானவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோரை ஒன்றிணைத்து கமிட்டி போல உருவாக்கலாம். இதை அரசியலாக பார்க்க வேண்டாம்.

கோயில்கள் மீட்டெடுக்கப்பட்டால் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று விமர்சிக்கப்படுகிறதே?

முன்பு தொழில் அடிப்படையில் சாதி வகுக்கப்பட்டது. தற்போது காலம் மாறிவிட்டது. எனவே, ஆர்வம், பக்தி இருந்தால் பயிற்சி அளித்து சாதி, மதம் பாராமல் திறமையின் அடிப்படையில் கோயிலை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தலாம். அரசு நிர்வாகத்தில் மதம் தலையிடக் கூடாது. மதத்தில் அரசு தலையிடக் கூடாது.

தேர்தல் நேரத்தில் இதை கூற என்ன காரணம்?

தங்களுக்கு என்ன தேவை என்றுமக்கள் கூற வேண்டும். அதைத்தான்அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டும். தேர்தல் முடிந்து சொல்வதால் என்ன பயன்? அதனால்தான் இப்போது சொல்கிறேன். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த 8300083000 என்ற எண்ணில் ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம் என்று கூறியுள்ளோம். 3 கோடி மக்கள் ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் அரசியல் கட்சிகளின் கவனம் ஈர்க்கப்படும்.

காடுகளை ஆக்கிரமித்துள்ளதாக உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

நடிகர் சந்தானம் உட்பட யார் வேண்டுமானாலும் நேரில் வந்து பார்க்கலாம். அவ்வாறு ஒரு இஞ்ச் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக நிரூபித்தால், இந்த நாட்டைவிட்டே செல்கிறேன்.

இவ்வாறு சத்குரு கூறினார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதே.

மிகவும் மகிழ்ச்சி.

உங்களுக்கு பிறகு ஈஷா அறக்கட்டளையை யார் நிர்வகிப்பார்கள்?

அதற்கு ஜனநாயகப்பூர்வமாக நடைமுறைகள் உள்ளன. நான் இல்லாவிட்டாலும் எங்களது தன்னார்வலர்கள் சிறப்பாக நிர்வகிப்பார்கள்.

சட்டப்பேரவை தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு?

நாடு முன்னேற, கல்வியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும், 12 மாதம் காவிரி தடையின்றி ஓடுவதற்கு 6 மாதத்துக்குள் என்ன செய்ய முடியும் என்று ஆராய வேண்டும் என்பது உட்பட மக்கள் நலன் சார்ந்த 5 விஷயங்களை சமீபத்தில் கூறியுள்ளேன். அதில் குறைந்தது 3 கோரிக்கைகளை நிறைவேற்றுபவர்களுக்குத்தான் என் வாக்கு.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் நடிகர் சந்தானம் பேசும்போது, ‘‘நான்ஒரு சிவ பக்தன். பல கோயில்கள்பராமரிப்பு இன்றி இருப்பதை படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது பார்த்திருக்கிறேன். அதனால்தான் சத்குருவின் கருத்துக்கு ஆதரவுதெரிவித்திருந்தேன். மற்றவர்கள் கிண்டல் செய்வதால் உணர்வுப்பூர்வமான விஷயம் காமெடியாக மாறிவிடக் கூடாது என்பதால் இங்கு வந்துள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x