கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பை தடுக்க முதியோர், இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி அறிவுரை

கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பை தடுக்க முதியோர், இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி அறிவுரை
Updated on
1 min read

கரோனா தொற்றின் கடுமையான பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்கமுதியவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் தினமும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிவந்த தொற்றின் பாதிப்பு, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் அக்டோபர் மாதம் முதல் கரோனா தொற்றின்தாக்கம் குறையத் தொடங்கியது. தொடர்ந்து கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததால் மேலும் தொற்று குறைந்து கொண்டிருந்தது. தினமும் சராசரியாக பாதிப்பு எண்ணிக்கை 450 என்றநிலையில் இருந்து வந்தது. ஆனால்,கடந்த ஒரு மாதமாக பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 700-ஐ நெருங்கியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல்தமிழகத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்குஇ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மூடப்பட்ட கரோனா சிகிச்சைமையங்களைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் 4 ஆயிரம் படுக்கைவசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள், மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களை மருத்துவக் குழுக்கள் கண்காணித்து பரிசோதனை செய்கின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிப்பது குறித்து பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் க.குழந்தைசாமி கூறியதாவது:

கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை கண்டு பயப்பட வேண்டாம். சிறுவர்கள், இளைஞர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டாலும் அவர்களுக்கு ஒன்றும் ஆகாது. ஆனால், அவர்கள் மூலமாக வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும்இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தொற்று ஏற்படலாம். முதியவர்கள், இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படும். உயிரிழப்புக்கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்கள்தான் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

அதனால், முதியவர்கள் மற்றும்45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புள்ளவர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் கரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாம். மீறி தொற்று ஏற்பட்டாலும் பாதிப்புகள் இருக்காது. உயிரிழப்பும் ஏற்படாது. அதனால், கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு குழந்தைசாமி தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in