மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு
Updated on
2 min read

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன், 2012 ஏப். 9-ல் நியமிக்கப்பட்டார். நியமனத்தை ரத்து செய்யக்கோரி மதுரை பேராசிரியர்கள் கே.பி.ஜெயராஜ், ஐ.இஸ்மாயில் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘பல்கலை. மானியக்குழு விதிப்படி 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர்களை மட்டுமே துணைவேந்தராக நியமிக்க முடியும். ஆனால் கல்யாணி மதிவாணன் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். பேராசிரியராக பணிபுரிந்தது இல்லை. எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2011-12-ம் ஆண்டில் துணைவேந்தர் பதவி காலியானது. இப்பதவிக்கு 104 பேர் விண்ணப்பித்தனர். தேர்வுக்குழு ஆர்.ஜெயராமன், கல்யாணி மதிவாணன், டி.ராமசாமி ஆகியோரின் பெயர்களை அரசுக்குப் பரிந்துரைத்தது.

அதில் கல்யாணி மதிவாணன் தேர்வு செய்யப்பட்டு, 2012 ஏப். 9-ல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 104 பேரில் கல்யாணி மதிவாணன் தவிர மற்ற 103 பேரும் பேராசிரியர்கள் ஆவர்.

பேராசிரியராக இருந்ததில்லை

துணைவேந்தர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும் என பல்கலை. மானியக் குழு 2010-ம் ஆண்டின் விதியில் கூறப்பட்டுள்ளது. கல்யாணி மதிவாணன், சென்னை எத்திராஜ் கல்லூரியில் உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆங்கிலத் துறை தலைவராகவும் இருந்துள்ளார். ஒரு நாள்கூட அவர் பேராசிரியராகப் பணிபுரிந்ததில்லை.

பேராசிரியர் பணியிடமும் இணைப்பேராசிரியர் பணியிடமும் சமமானது என்ற துணை வேந்தர் தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது. தற்போது உயர் தகுதியானவர்களை துணைவேந்தராக நியமிக்கும் சூழல் இல்லை.

பல்கலை. மானியக்குழு சட்டப்படி, மிகச் சிறந்த தனித்துவம் பெற்ற கல்வியாளர்களை மட்டுமே துணைவேந்தராக நியமிக்க முடியும். மிகச் சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைகூட துணைவேந்தராக நியமிக்க முடியாது. அதே நேரத்தில் கல்யாணி மதிவாணன் கல்வியாளர் அல்ல என நீதிமன்றம் கூறவில்லை.

மதுரை காமராஜர் பல்கலை. விதியில் துணைவேந்தர் பதவிக்கு குறிப்பிட்ட தகுதிகள் இல்லை என்கின்றனர். அதையேற்றால் யார் வேண்டுமானாலும் துணைவேந்தராக வர முடியும். அந்த நிலை இப்போது எழவில்லை.

இந்த வழக்கில் அரசு மற்றும் துணைவேந்தர் தரப்பு வாதம் மிகவும் அபாயகரமானது.

விதிகளை கருத்தில் கொள்ளவில்லை

துணைவேந்தர் தேர்வுக்குழு, துணைவேந்தர் தேர்வு தொடர்பான பல்வேறு விதிகளை கருத்தில் கொள்ளவில்லை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளையும், கல்யாணி மதிவாணன் நியமனத்தில் பின்பற்றவில்லை. அவரை துணைவேந்தராக நியமிக்க தகுதி இல்லாதபோது, மானியக்குழு விதிகளை முழுமையாக மறைத்துவிட்டு அவர் தகுதியானவர்தான் எனக் கூறுவதை ஏற்கமுடியாது. எனவே அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கல்யாணி மதிவாணன் தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in