

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி அளித்த திமுக, 2021 தேர்தல் அறிக்கையில், பூரண மதுவிலக்கு வாக்குறுதியை தவிர்த்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது.
இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தன.
தோல்விக்கு காரணமா?
ஆனால், அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பூரண மதுவிலக்கு அறிவிப்புதான் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தோல்வியடைய காரணமாக அமைந்ததாக பரவ லாக பேசப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
இந்த சூழலில், ஆட்சிப் பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளைமூடுமாறு உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுகளின்படி, நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த டாஸ்மாக்கடைகள் மூடப்பட்டாலும் நகரின்உள்பகுதிக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகின்றன. தற்போதைய நிலையில், தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
அமமுக வாக்குறுதி
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம்தேதி நடக்க உள்ளது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அமமுக தேர்தல் அறிக்கையில், ‘தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவரும் வகையில், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்ற கொள்கை முடிவு உடனடியாக எடுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், திமுக நேற்றுவெளியிட்ட தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்தஅறிவிப்பும் இல்லை.
மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருப்பது, மக்கள்மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.