சிதம்பரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் 70 ஆண்டுகளைக் கடந்து தொடரும் கல்விப்பணி…

பள்ளியின் பதிவேட்டில் காமராஜர் எழுதிச் சென்ற நற்சான்று.
பள்ளியின் பதிவேட்டில் காமராஜர் எழுதிச் சென்ற நற்சான்று.
Updated on
1 min read

சிதம்பரத்தில் 70 ஆண்டுகளைக் கடந்து கல்விப்பணி ஆற்றி வரு கிறது அரசு உதவி பெறும்  ராமகிருஷ்ணா பள்ளி.

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்; கல்வியோடு நற்சிந்தனையும், நமது பண்பாட்டுடன் நல் ஒழுக்கம் வாய்க்கப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது இப்பள்ளி.

 ராமகிருஷ்ண பரமஹம்சரிடத் திலும், அவரது கொள்கைகளிலும் கொண்ட பற்றின் காரணமாக சிதம்பரத்தைச் சேர்ந்த வணிகர் ரெத்தினசாமி செட்டியாரால் “ஸ்ரீராம கிருஷ்ண வித்தியாசாலை” என்ற பெயரில் 1948-ம் ஆண்டு தொடக்கப் பள்ளி ஒன்று நிறுவப்பட்டது. இப்பள்ளி 1950ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. 1973-ம் ஆண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக மலர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது.

‘கற்கும் கல்விக்கு, பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில், 1955-ம் ஆண்டு தமிழக அரசு மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே இப்பள்ளி மட்டுமின்றி சுற்றுப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினரின் சொந்த செலவில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இப்பள்ளியின் நிறுவனர் ரெத்தினசாமி செட்டியாரின் அறப்பணியைப் பாராட்டி காஞ்சி சங்கராச்சாரியார் ‘தரும பூஷணம்” என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்க. இப்பள்ளிக்கு பல்வேறு தருணங்களில் காமராஜர், சஞ்சீவரெட்டி, திவான் பகதூர் சி.எஸ். சீனிவாசாச்சாரியார், கி.வா.ஜகந்நாதன் ,சுவாமி சித்பவானந்தர், கிருபானந்த வாரியார், சி.சுப்ரமணியம்,நெ.து.சுந்தர வடிவேலு, புலவர் கீரன், நாவலர் நெடுஞ்செழியன், வெள்ளை வாரணனார், தென்கச்சி கோ. சுவாமிநாதன் போன்ற சான்றோர்கள் வருகை புரிந்து சிறப்பித்துள்ளனர். இவர்களது கல்விப் பணியை பாராட்டிச் சென்றுள்ளனர். 20-03-1955ல் இப்பள்ளிக்கு வருகை தந்த காமராஜர் பள்ளியின் பார்வையாளர் பதிவேட்டில் “இந்த உயர்நிலைப்பள்ளி நல்லமுறையில் வளர்ச்சி அடைந்து கொண்டு வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பள்ளி மாணவர்கள் பலர் அந்த காலத்திலேயே அறிவியல் மாநாடுகளில் ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்து பரிசு பெற்று வந்துள்ளனர்.

நிறுவனரின் மறைவுக்குப்பின் அவரது மூத்தப் புதல்வர் பாலசுப்ரமணியன் பள்ளியின் செயலராகவும், இரண்டவது மகன் ராமநாதன் தலைவராகவும், மூன்றாவது மகன் திருநாவுக்கரசு துணைத்தலைவராகவும் செயல்பட்டு தம் தந்தையார் வழியில் பள்ளியை வழி நடத்தி வருகிறார்கள். அரசு நிதி உதவிபெறும் இப்பள்ளியில் இன்றளவும் அரசின் தகுதி அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 1,480 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

சிதம்பரத்தை ஒட்டியுள்ள கிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கு இந்தப் பள்ளியின் பங்களிப்பு முக்கியமானது என்றால் அதில் மிகையில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in