Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 6 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடிப் போட்டி

சட்டமன்றத் தேர்தலில் பிரதான இரு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் ஒதுக்கப்பட்டு, முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

நம் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் தற்போதைய நிலவரத்தை கொண்டு அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் கீழ்கண்டவை.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடிப் போட்டியில் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி(தனி), காட்டு மன்னார்கோவில் (தனி) என 9 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக, திமுக நேரடிப் போட்டியில் உள்ளது.

சிதம்பரம் தொகுதியில் அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் களம் காண்கிறது.

காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் அதிமுகவை எதிர்த்து திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

நெய்வேலி தொகுதியில் திமுகவும், அதிமுக கூட்டணி சார்பில் பாமகவும் போட்டியிடுகிறது.

பண்ருட்டியில் அதிமுகவும், திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சியும் போட்டியிடுகிறது.

திட்டக்குடி தனித்தொகுதியில் திமுகவும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் மோதுகிறது.

விருத்தாசலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மோதுகிறது.

கடலூர்

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் சம்பத், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் நேரடியாக களத்தில் மோதுகின்றனர். தற்போதைய நிலவரப்படி சம பலத்தில் இருக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் இவர்களின் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் யுக்தி ஆகியவற்றைப் பொறுத்து வெற்றி வாய்ப்புகள் அமையும்.

குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடி தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சரும், தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம், கடலூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பழனிசாமியும் மோதுகின்றனர். தேர்தல் களத்திற்கு புதிய நபராக பழனிசாமி அறியப்படுகிறார். ‘எம்ஆர்கேவுக்கு பழைய வெற்றி அனுபவங்கள் கைகொடுக்கும்’ என்கின்றனர் திமுகவினர். ‘அதிமுக கட்சி நிர்வாகிகளின் ஒற்றுமையான களப்பணி பழனிசாமிக்கு கைகொடுக்கும்’ என்கின்றனர் எதிர் தரப்பினர்.

புவனகிரி

புவனகிரி தொகுதியில் திமுக சார்பில் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் சரவணன் களம் காண்கிறார். அவரை எதிர்த்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழிதேவன் போட்டியிடுகிறார். இரு தரப்புமே பலத்த போட்டியைத் தருவதாகவே கள நிலவரம் இருக்கிறது.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது எம்எல்ஏவாக உள்ள முருகுமாறன் போட்டியிடுகிறார். எளிய அணுகுமுறை இவருக்கு பலம் சேர்க்கக்கூடும் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். அவருக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி களத்தில் உள்ளது. இன்னும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வு, கூட்டணிக் கட்சிகளின் கடும் உழைப்பு இதையெல்லாம் பொறுத்து வெற்றி அமையும்.

சிதம்பரம்

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ பாண்டியனும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் ரஹ்மானும் மோதுகின்றனர். இதில் அப்துல் ரஹ்மான் தேர்தலுக்கு புதியவர். களப்பணி கடுமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை நிலவுகிறது.

நெய்வேலி

நெய்வேலி தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ சபா ராஜேந்திரனும்,அதிமுக கூட்டணியில் பாமகவைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகனும் மோதுகின்றனர். இந்தத் தொகுதி என்எல்சி அதிகாரிகள், தொழிலாளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாகும். கொள்கை ரீதியான வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும்.

திட்டக்குடி

திட்டக்குடி தனித் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ கணேசனும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் மோதுகிறது. பாஜகவில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதியில் பலமாக உழைத்தால் மட்டுமே பாஜக வெற்றி பெற முடியும் என்ற நிலை நிலவுகிறது.

விருத்தாசலம்

விருத்தாசலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயனும், திமுக கூட்டணியில் காங்கிரஸூம் மோதுகிறது. காங்கிராஸ் கட்சி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாமக சற்று வலுவாகவே இருக்கிறது. திமுகவின் பக்க பலத்தை நம்பி காங்கிரஸ் நிற்கிறது. காங்கிரஸ் கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டிய தொகுதி இது.

பண்ருட்டி

பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரனும், திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகனும் போட்டியிடுகின்றனர். இருவருமே தேர்தல் களம் கண்டவர்கள், சொந்தக் கட்சியினர், கூட்டணிக்கட்சியினருடன் இணைந்து கடுமையாக இறங்கி தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றி பெறமுடியும்.விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 3 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி,மயிலம், திண்டிவனம்(தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் என 7 தொகுதிகள் உள்ளன. இவற்றில் விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் நேருக்கு நேர் மோதுகிறது.

செஞ்சி, மயிலம் தொகுதிகளில் திமுக பாமகவை எதிர்கொள்கிறது. வானூரில் அதிமுக வுடன் விசிகவும், திருக்கோவிலூரில் திமுக பாஜகவுடன் போட்டியிடுகிறது.

அனைத்து தொகுதிகளிலும் இரு தரப்பிலும் தாங்கள் சார்ந்த பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைப் பெரிதும் நம்பியுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக சார்பில் முன்னாள் எம்பி லட்சுமணன் நேருக்கு நேர் மோதுகின்றனர். இருவரும் அதிமுகவில் ஒன்றாக பயணித்தவர்கள். எனவே இருவரின் தேர்தல் யுக்தி, பலம், பலவீனம் என்பது ஒவ்வொருவர் நன்கறிவர். இதுவே இருவருக்கும் பலமும் பலவீனமும்.

சட்டமன்றத் தேர்தல் வழியாக லட்சுமணன் முதல் முறையாக மக்களை சந்திக்கிறார். சி.வி.சண்முகத்திற்கு இது 5வது தேர்தல். பாஜக, அதிமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் சிறுபான்மை மக்களிடம் எடுபடும் என திமுக ஆணித்தரமாக நம்புகிறது. ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள், வன்னியர் களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, விவசாயக்கடன், நகைக்கடன் தள்ளுபடி போன்றவை இத்தொகுதியில் தங்களுக்கு கை கொடுக்கும் என அதிமுக நம்புகிறது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சமூகம் சார்ந்த வாக்கு வெற்றி - தோல்வி நிர்ணயம் இங்கு எடுபடாது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் மாவட்ட செயலாளரான புகழேந்தியும், அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும் போடியிடுகின்றனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தத் தொகுதியிலும் அதைக் கொண்டு கணக்கிட முடியாது.

கடந்த இடைத்தேர்தலில் தோல்வியை தழுவிய புகழேந்தி மீது வாக்காளர்களிடம் ஒரு ‘சாப்ட் கார்னர்’ இருக்கும் என திமுகவினர் நம்புகின்றனர். முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி என்பதால் அதிமுக தங்களின் வெற்றிக்கு பாமகவை முழுமையாக நம்புகிறது.

செஞ்சி

செஞ்சி தொகுதியில் திமுகவும், பாமகவும் மோதுகிறது. திமுக சார்பில் எம்எல்ஏ கே. எஸ்.மஸ்தானும், பாமக சார்பில் மே.பொ. சி.ராஜேந்திரனும் போட்டியிடுகின்றனர். சிறுபான் மையின மக்களின் வாக்குகள் மற்றும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வாக்குகளை திமுக முழுமையாக நம்பியுள்ளது. பாமக தங்கள் வாக்குகளோடு அதிமுகவின் பலத்தை முழுமையாக நம்பியிருக்கிறது. போட்டியிடும் இருவருமே தாங்கள் சார்ந்த கட்சியில் சீனியர்கள்; தொகுதி மக்களுக்கு பரிச்சயமானவர்கள்.

மயிலம்

மயிலம் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ மாசிலாமணியும், பாமக சார்பில் சி. சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். முழுக்க முழுக்க கிராமங்கள் உள்ள தொகுதி என்பதால் ஒரு சமூக மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். அம்மக்களை யார் கவர உள்ளனர் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

திண்டிவனம்

திண்டிவனம் தொகுதியில் எம்எல்ஏ சீதாபதி சொக்கலிங்கமும், அதிமுக சார்பில் அர்ஜூணனும் போட்டியிடுகின்றனர். சீதாபதி ஒலக்கூர் ஒன்றியத்தையும், அர்ஜூணன் மரக்காணம் ஒன்றியத்தையும் சேர்ந்தவர்கள். இருவரும் யூனியன் சேர்மன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தங்கள் ஒன்றிய வாக்குகளை பிரித்துக்கொள்ளும் இவர்கள், திண்டிவனம் நகர மக்களின் வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களே வெற்றிக்கனியை ருசிப்பார்கள்.

வானூர்

வானூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்எல்ஏ சக்கரபாணி போட்டியிடுகிறார். விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இங்கு தனிப்பட்ட செல்வாக்கை விட கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பே வெற்றியே தீர்மானிக்கும்.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரான எம்எல்ஏ பொன்முடி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் விஏடி கலிவரதன் போட்டியிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் மாவட்ட அளவில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் பொன்முடி. எனவே இங்கு பொன்முடியை வெல்ல கலிவரதன் கடுமையாக போராடியே ஆகவேண்டும். அதற்கு கூட்டணிக்கட்சியான அதிமுகவின் பங்களிப்பு மிக முக்கியம். இருவரும் பிரதான இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மற்ற பொதுவான சமூக மக்களின் வாக்குகளே இங்கு வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.

அனைத்து தொகுதிகளிலும் இரு தரப்பினரும் தாங்கள் சார்ந்த பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைப் பெரிதும் நம்பியுள்ளனர். கடுமையாக போராடியே ஆக வேண்டும். கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தீவிரமாக இறங்கி தேர்தல் பணியாற்றினால்தான் வெற்றி பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x