

அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் திமுகவில் இணைந்ததால், குறிப்பிட்ட சதவீத அதிமுக வாக்குகள் திமுகவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) தொகுதியில் 1989, 1991, 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர் சுந்தரராஜ். இவர் 2011-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
எஸ்.சுந்தரராஜ் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக பொருளாளராகப் பல ஆண்டு களாக இருந்து வந்தார். பரமக்குடி தொகுதியில் 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ராம்பிரபுவிடம் தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டு தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அப்போதே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகி கள் மீது வெறுப்படைந்தார்.
அதையடுத்து இத்தொகுதியில் டாக்டர் முத்தையா வெற்றி பெற்று அமமுகவுக்குச் சென்றதால் 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல் வந்தது. அப்போதும் பரமக்குடியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, என்.சதன் பிரபாகருக்கு சீட் வழங்கப்பட்டது.
கட்சியில் மூத்தவர், மூன்று முறை எம்எல்ஏ, 5 ஆண்டுகள் அமைச்சர், மாவட்டப் பொருளாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வரும் தனக்கு இந்த முறை கட்டாயம் சீட் வேண்டும் எனக்கேட்டார். ஆனால் கட்சித் தலைமை மீண்டும் என்.சதன்பிரபாகர் போட்டியிட வாய்ப்பு அளித்தது.
அதனால் டாக்டர் சுந்தரராஜ் கட்சித் தலைமை நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
டாக்டர் சுந்தரராஜூக்கு பரமக் குடி தொகுதியில் தனி செல்வாக்கு உண்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய், 2 ரூபாய்க்கும், அதையடுத்து 5 ரூபாய்க்கும் வைத்தியம் செய்து நகர், கிராம மக்களிடம் செல்வாக்கு பெற்றார். அதனால் அவர் தேர்தலில் போட்டி யிடும் போதெல்லாம் இத்தொகுதி மக்கள் இவருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.
இவர் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள், நெச வாளர்கள், ஆயிர வைசிய மக்கள் எனப் பல தரப்பினரிடமும் சுந்தரராஜ் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தார். தற்போது இவர் திமுகவுக்கு சென்றுவிட்டதால் சுந்தரராஜின் ஆதரவாளர்கள் பலரும் அக்கட்சிக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் குறிப்பிட்ட சதவீதம் அதிமுக ஓட்டுகள் சரியவும் வாய்ப்புள்ளது என சுந்தரராஜின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.