

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி களை ஆய்வு செய்ய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தாமஸ் ஆகியோரைக் கொண்ட இரு நபர் குழுவை கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார்.
இக்குழுவினர் நேற்று காலை வடசென்னை காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் முகுல் வாஸ்னிக், கே.வி.தாமஸ் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு அரிசி, உணவுப் பொருட்கள், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கினர்.