

‘‘அதிமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜு, ஓட்டப்பிடராம் வேட்பாளர் மோகன் ஆகியோர் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும். அதிமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிமுகவிலிருந்து மாற்றுக் கட்சிக்கு செல்பவர்கள் அரசியல் தற்கொலை செய்வதற்கு சமம்.தேர்தலில் போட்டியிட வாய்ப்புகிடைக்கவில்லை என்பதற்காக மாற்றுக் கட்சியில் சேருவது அரசியல் வாதிக்கு அழகல்ல. என்னைப் பொறுத்தவரை எதிர்த்து நிற்பவர் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமே முந்தைய திமுக, காங்கிரஸ் ஆட்சி தான்.
சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது தான் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெட்ரோலிய நிறுவனத்திடமே வழங்கிவிட்டார். ஆனாலும் மத்திய அரசு இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
திருச்செந்தூர் நகரச் செயலாளர் மகேந்திரன், ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.