

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக சார்பாக வாரிசுகள் நான்கு பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் துணை சபாநாயகராக பதவி வகித்தவர் வி.பி.பாலசுப்பிரமணி. இவரது மகன் வி.பி.பரமசிவம். கடந்த 2016 தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் வேடசந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டி யிடுகிறார்.
கட்சிக்கு பாடுபட்ட மூத்த நிர்வாகிகள் பலரும் சீட் எதிர்பார்த்த நிலையில் இவருக்கு கடந்த தேர்தலில் சீட் கிடைத்தது. இதை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் தற்போது போட்டியிடுகிறார்.
இதேபோல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்தவர் குப்புசாமி. இவரது மகன் ரவிமனோகரன். முதன்முறையாக பழநி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். கட்சியில் அடிப் படை உறுப்பினராக உள்ள இவருக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
பழநி தொகுதி
திமுக மாநில துணைப்பொதுச் செயலார் ஐ.பெரியசாமி. இவர் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். இவரது மகன் இ.பெ.செந்தில்குமார். இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2011 தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2116 தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் பழநி தொகுதியில் போட்டியிடுகிறார்.
நத்தம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு எம்.எல்.ஏ.வாக ஆறு முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் எம்.ஏ.ஆண்டி அம்பலம். இவரது மகன் ஏ.ஆண்டி அம்பலம். இவர் 2016 தேர்தலில் நத்தம் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் நத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2016 தேர்தலில் திமுகவில் மூன்று பேர், அதிமுகவில் ஒருவர் என முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகள் போட்டியிட்டனர். இந்த முறை நடைபெறவுள்ள 2021 தேர்தலில் திமுக சார்பில் இருவர், அதிமுக சார்பில் இருவர் என நான்கு எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகள் களம் இறங்கியுள்ளனர்.