Published : 04 Nov 2015 07:25 AM
Last Updated : 04 Nov 2015 07:25 AM

108 ஆம்புலன்ஸ் பணியாளர் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களின் சேவை பாதிக்காது: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் சேவை பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்தது. இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் பணியாளர்களின் வேலை நிறுத்த நோட்டீஸ் சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரும் வழக்கு முடித்து வைக்கப் பட்டது.

இதுதொடர்பாக சென்னை நன்மங்கலத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

ஆந்திராவைச் சேர்ந்த ஜிவிகே அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 2008-ம் ஆண்டு முதல் லாப நோக்கம் இல்லாமல், 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறது. 32 மாவட்டங்களில் 684 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்குகின்றன. இதில், 3500 பேர் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், 20 சதவீத போனஸ் கோரி வரும் 8-ம்தேதி இரவு 8 மணி முதல் 24 மணி நேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், கோரிக்கை நிறைவேறாவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

எனவே, அதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகி யோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு: 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சேவை தொடர்பானது என்பதால், இப்பிரச்சினையில் சட்டவிதிகள் ஏதேனும் மீறப்பட்டால், இப்போராட்டம் சட்டவிரோதம் என்று அறிவிக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வழக்கறிஞர் உறுதி அளித்திருப்பதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x