

இளைஞர்கள் மற்றும் இளம் வாக்காளர் களை கவர்வதற்கான முயற்சியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஈடுபட் டுள்ளனர். இதற்காக தனித்தனியே பிரச்சார குழு அமைத்து பொது உடமை, அரசியல் மாற்றம், இயற்கை வளம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி உணர்ச்சிப்பூர்வமாக பேசி ஆதரவு திரட்டி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்டி பட்டியில் அ.ஜெயக்குமாரும், கம்பத்தில் அ.அனீஸ் பாத்திமா, பெரியகுளத்தில் விமலா, போடியில் மு.பிரேம்சந்தர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
கூட்டணி அமைக்காமல் தனியாகவே இக்கட்சி தேர்தல் களத்தில் செயலாற்றி வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதியையும் 4, 5 பகுதிகளாக பிரித்து குழுவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
உதாரணமாக கம்பம் தொகுதியில் ராயப்பன்பட்டி, நாகையகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம் ஒருபிரிவாகவும், அனுமந்தன்பட்டி, கோவிந்தன்பட்டி, டி.புதுப்பட்டி, ஊத்துக்காடு பகுதியை இன்னொரு பிரிவாகவும், அதே போல் கம்பம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் என்று பிரித்து பிரச்சாரத் திட்டங்களை அமைத்துள்ளனர்.
பெரும்பாலும் அத்தொகுதி விஷயங் களையே முன்னிறுத்தி வருகின்றனர். கம்பத்தில் பாதாள சாக்கடை, லோயர்கேம்ப்பில் இருந்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லக் கூடாது, பெரியகுளத்தில் மாம்பழத் தொழிற்சாலை, போடி மலைகிராம மக்களுக்கு அடிப்படை வசதி, ஆண்டி பட்டியில் நெசவாளர்களுக்கான திட்டங்கள் என்று அப்பகுதி பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றனர்.
அறிமுக முகங்களோ, விஐபி பேச்சாளர்களோ இல்லாத நிலையில் இவர்களின் பிரச்சாரம் அமைதியாக நடைபெற்று வருகிறது. மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த வாரமே இவர்கள் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டனர். குறிப்பாக இளைஞர்கள், இளம் வாக்காளர்கள், பொதுஉடமை சிந்தனைவாதிகள் உள்ளிட்டோரை கவர்வதற்கான முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனித்துவ பிரச்சார வியூகங்களை அமைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், விவசாயம் அரசுப் பணியாக மாற்றப்படும், மது, புகையிலை மற்றும் லஞ்சத்தை ஒழிப்பது உள்ளிட்ட விஷயங்களை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வருகிறோம். பெரும்பாலும் இவற்றை துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்து ஆதரவுகேட்டு வருகிறோம். 30 வயதிற்கு கீழ் உள்ளவர்களே எங்கள் கட்சி குறித்து ஆர்வமாக உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் மத்தியில் பொதுவுடமை சிந்தனை அதிகமாகி உள்ளதால் அவற்றை முன்வைத்துள்ளோம். ஒரேநாளில் 4 கிராமங்களில் பிரச்சாரம் செய்கிறோம். கூட்டணி கட்சிகளோ, பணபலமோ இல்லாத நிலையில் எங்களுக்கென்று தனிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். சீமானின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனவே திராவிட கட்சிகளுக்கு மாற்றாக குறிப்பிட்ட சதவீத ஓட்டுக்களைப் பெற்று விடுவோம் என்று நம்பிக்கை உள்ளது என்றனர்.