

வாணியம்பாடியில் ஆதரவு கேட்கச் சென்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை திமுக தொண்டர்கள் சுற்றி நின்று உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மிரட்டும் தொணியில் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் (ஐயூஎம்எல்) கட்சிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் முகமது நயீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், வாணியம்பாடி நகர திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட தனது கட்சி நிர்வாகிகள் சிலருடன் நேற்று சென்றுள்ளார்.
வாணியம்பாடி அம்பூர்பேட்டை யில் உள்ள நகர திமுக அலுவல கத்துக்கு சென்றபோது, அங்குதிரண்டிருந்த திமுக தொண்டர்கள் சிலர் முகமது நயீம் உள்ளிட்டோரை சூழ்ந்துகொண்டு ‘நீங்கள்அதிமுகவினருக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். முதல்வர் வந்தபோது அவருக்கு பூங்கொத்து கொடுத்தீர்கள். அமைச்சர் நிலோபர் கபீல் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் நாங்கள் வேலை செய்ய முடியாது. வேண்டும் என்றால் வேட்பாளரை மாற்றுங்கள், இல்லாவிட்டால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள்’’ என்றனர்.
இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில் பிரச்சினையில் விபரீதத்தை உணர்ந்து கொண்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் முகமது நயீம் அகியோர் அந்த இடத்தில் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது திமுக அலுவலகத்தில் தான் நகர பொறுப்பாளர் சாரதி குமார் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரச்சினை குறித்து தெரிந்தும் அதை சரி செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஐயூஎம்எல்நிர்வாகிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘வாணியம்பாடியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முகமது நயீம் அனைவரிடமும் சமமாக பழகக்கூடிய எளிமையான மனிதர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு பார்க்காதவர்.
வாணியம்பாடி முஸ்லிம் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ளார். அந்த வகையில் முதல்வர் வருகையின்போதும், அமைச்சராக நிலோபர்கபீல் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால், அதிமுகவுக்கு ஆதரவானவர் இல்லை. இந்தப் பிரச்சினையை சிலர் வேண்டும் என்றே தேவையில்லாமல் கிளப்பியுள் ளனர். இதுகுறித்து திமுக தலைமையிடம் புகார் தெரிவிக்கப்படும்.
திமுக போட்டியிடும் தொகுதியில் அவர்களுக்காக நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறோம்’’ என்றனர்.