

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் எச்.வசந்தகுமாரும் போட்டியிட்டார்கள். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு கரோனா தொற்று பாதிப்பால் ஆகஸ்ட் 28-ம் தேதி உயிரிழந்தார்.
ஆகையால் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்றது நினைவு கூரத்தக்கது.
இந்நிலையில், தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களுடன், கன்னியாகுமாரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் தான் விஜய் வசந்த். இவருக்குத் தான் இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்று முன்கூட்டியே தகவல்கள் வெளியானது. அதைப் போலவே தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொகுதியில் பாஜகவின் 30ஆண்டுகால வேட்பாளர் என்ற பெருமையை பொன் ராதாகிருஷ்ணன் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.